வனப்பகுதிகளில் அன்னிய மரங்கள் அகற்றும் நடவடிக்கையில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் அறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.சுற்றுச்சுழல், வனம், வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.அப்போது, வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக, சுற்றுச்சூழல் துறை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், வனப்பகுதிகளில் உள்ள இதுபோன்ற அன்னிய மரங்களை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் அப்புறப்படுத்தினால், கேரளா மாநிலம் வயநாட்டில் நடந்த நிலச்சரிவு சம்பவம் போன்று ஏற்பட்டு விடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு நீதிபதிகள், வனப்பகுதிகளில் உள்ள விஷ மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து விட்டு, தற்போது திடீரென வயநாடு சம்பவத்தை கூறி பின்வாங்குவது ஏன்? சுற்றுச்சூழல் துறை செயலாளர் அரசியல்வாதியை போல செயல்படக்கூடாது. அரசியலுக்கு செல்ல வேண்டும் என்றால், பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லலாம் என கண்டனம் தெரிவித்தனர்.மேலும் நீதிபதிகள், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அன்னிய மரங்கள் வேகமாக வளர்வதால், வன விலங்குகள் ஊருக்கு நுழைந்து விலங்குகள் - மனிதர்கள் மோதல் ஏற்பட கூடும். அதை தடுக்கவே இந்த மரங்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது எனக் கூறி, வழக்கு விசாரணையை தஒத்திவைத்தனர்