எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள் வெளியே உள்ள அதிகார வர்க்கத்தால் எடுக்கப்படுகிறது என வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியான செய்தி அடிப்படை ஆதாரமற்றது, உண்மைக்கு புறம்பானது என எல்ஐசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எல்ஐசியில் சாதாரண மக்கள் முதலீடு செய்துள்ள பணத்தில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாயை அதானிக்கு சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு மோடி அரசின் அதிகாரிகள் உத்தரவிட்டதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டது. ஆனால் அப்படி எதுவும் கிடையாது எனவும் எங்கெங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதை எல்ஐசியின் போர்டு சுதந்திரமாக முடிவு செய்வதாகவும் எல்ஐசி விளக்கம் அளித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் அல்லது நிதிச் சேவை துறைக்கு இதில் எந்த பங்கும் கிடையாது எனவும் எல்ஐசியின் மறுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.