ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அப்போது, மனமுருக தியானம் செய்து வழிபாடு நடத்தினார்.புட்டபர்த்தியில், பிரதமர் மோடி, சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழாவில் பங்கேற்றார். முன்னதாக, சாய்பாபாவின் மகா சமாதியில் வழிபட்டு, தியானத்தில் ஈடுபட்டார். 100 ரூபாய் சிறப்பு நாணயத்தையும் வெளியிட்டார். புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவ.13ஆம் தேதி தொடங்கியது. வரும் நவ.24ஆம் தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி இன்று காலை புட்டபர்த்தி வந்தார். சாய் பாபாவின் பிரசாந்தி நிலையம் சென்று மகா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அங்கு வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழங்க, பிரதமர் மோடி சிறிது நேரம் தியானம் செய்தார். தொடர்ந்து, கோசாலையில் இருந்த பசுக்களுக்கு தீவனம் வழங்கினார்.தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பிரபல பாடகி சுதா ரகுநாதன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, இசைக்கலைஞர் சிவமணியின் டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, நாட்டியக்கலைஞர்களின் அசத்தல் நடனங்களை பிரதமர் மோடி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கண்டு ரசித்தனர்.தொடர்ந்து, சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிக்கும் விதமாக 100 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். தொடர்ந்து சத்ய சாய்பாபாவின் பெருமைகள் பற்றியும், அவரது சேவை குறித்தும் பிரதமர் மோடி உரையாற்றினார்.