தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலை கட்சித் தலைமை மறுத்துள்ள சூழலில், சில மாவட்ட செயலாளர்கள் தங்களை தாங்களே வேட்பாளர்களாக அறிவித்துக் கொண்டு, வாக்கு கேட்ட நிகழ்வு தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிற கட்சிகளெல்லாம் தலைமை என்ன சொல்கிறதோ அதைத் தான் தொண்டர்கள் செய்வார்கள். ஆனால், தவெகவில் மட்டும் தலைகீழாக தலைமை என்ன சொல்வது, நான் என்ன செய்வது என, ஏட்டிக்கு போட்டியாகத் தான் நடக்கிறது. அப்படி நடந்தது தான் இந்த கூத்தும்...2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சி முதல் லெட்டர் பேடு கட்சி வரை அனைத்துமே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. இன்னும் சொல்லப்போனால் சில கட்சிகள் விருப்ப மனு விநியோகத்தை கூட தொடங்கி விட்டன. இந்நிலையில் தான், புதிதாய் களத்தில் இணைந்துள்ள தவெகவும் தேர்தல் அரசியலுக்கு தயாராகி வருகிறது. சில மாவட்ட செயலாளர்கள், இப்போதே இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் தங்களை தாங்களே புரொமோட் செய்து கொண்டு தீவிரமாக எம்.எல்.ஏ. சீட்டுக்கு காய் நகர்த்தி வருகின்றனர்.இப்படி சோசியல் மீடியாவில் புரொமோஷன் செய்பவர்களில் முதன்மையானவர் தான் தவெக சிவகங்கை மாவட்ட கிழக்கு பிரிவு செயலாளரான பல் மருத்துவர் பிரபு. எப்போதும் டிப் டாப்பாக களத்தில் வலம் வரும் பிரபு, கேமராக்கள் இல்லாமல் எந்த நல்ல காரியத்தையும் செய்ததில்லை. பல் துலக்கும் பிரஷாக இருந்தாலும் சரி, படுத்துறங்கும் பாயாக இருந்தாலும் சரி எது கொடுத்தாலும் என்ன செய்தாலும், அதனை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடும் பிரபு, காரைக்குடி தொகுதியை குறிவைத்து காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் தான், தவெகவில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. இவர் வேட்பாளரா அவர் வேட்பாளரா என்ற விவாதங்களும் சூடுபிடிக்க தொடங்கியது. இதனிடையே தான், வேட்பாளர்களின் பெயரை விஜய் தான் வெளியிடுவார் என புஸ்ஸி ஆனந்த் உறுதிபட தெரிவித்திருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் இந்த அறிவிப்பை வெளியிடும் ஒரு சில மணித்துளிக்கு முன்னர் தான், சிவகங்கை மாவட்ட செயலாளரான பிரபுவை காரைக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் என அறிவித்து ஒன்றியச் செயலாளர் ஒருவர் வாக்கு சேகரித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. ஒன்றிய செயலாளர் தான் ஏதோ உளறுகிறார் என்றால் அதை நிறுத்த வேண்டிய பிரபுவோ அவரது பேச்சை கேட்டு கனவில் மிதந்து கொண்டிருந்தார்.அதுவும், காரைக்குடியில் எந்த பூத்தில் தவெக அதிக வாக்குகளை வாங்குகிறதோ அந்த பூத்தை சேர்ந்த தவெக ஏஜென்டுகளுக்கு தங்க நாணயம் வழங்குவதாகவும், பிரபு எம்.எல்.ஏ ஆன பின் தொகுதி மக்களை சட்டமன்றத்துக்கு அழைத்து செல்லவிருப்பதாகவும் கூறி, வாய்க்கு வந்த வாக்குறுதிகளையெல்லாம் அள்ளி வீசினார் அந்த ஒன்றிய செயலாளர்.இதேபோல, தவெக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் விஜயகுமாரும் சூசகமாக தன்னை தானே கும்மிடிப்பூண்டி வேட்பாளராக அறிவித்து பேசிய வீடியோவும் வெளியாகி இருக்கிறது. வேறொரு தொகுதியை சேர்ந்த தாம், வாக்காளர் அடையாள அட்டையை கும்மிடிப்பூண்டி தொகுதிக்கே மாற்றிக் கொண்டதாகவும் கூறி தொண்டர்களை உற்சாகமூட்டியுள்ளார்.தவெக வேட்பாளர்களை விஜயே நேர்காணல் நடத்தி அறிவிப்பார் என பொதுச் செயலாளரே அறிவித்த அதே நாளில் மாவட்ட செயலாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வேட்பாளராக அறிவித்துக் கொண்டும், பிஆர் வேலைகளில் ஈடுபடுவதும் தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது மட்டுமின்றி, தலைமையின் ஆளுமையையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.