கடந்த 3 நாட்களில் மட்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் துயரத்துக்கு ஆளான நிலையில், இந்தப் பிரச்சனைக்கான காரணம் என்ன? இந்தப் பிரச்சனை எப்போது சரியாகும்? என்பதை அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு. விமான விபத்துகளை தவிர்க்க, விதிமுறைகள் வீரியமாக்கப்பட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், சிவில் விமான போக்குவரத்துத் துறை புதிய விதிமுறைகளை வகுத்தது. இதன்படி, 18 மணி நேரம் பறந்து கொண்டிருந்த விமானியின் ஷிப்டு, 8 மணி நேரமாக குறைக்கப்பட்டது. மேலும், விமானிகளுக்கான விடுப்பும் வாரத்தில் 36 மணி நேரமாக இருந்த நிலையில், 48 மணி நேரமாக மாற்றப்பட்டது. இப்படி பார்த்தால் 2 நாட்கள் விமானி கட்டாய விடுப்பு எடுத்தே ஆக வேண்டும். இந்த விதிகளை எல்லாம் பின்பற்ற 2 ஆண்டுகாலம் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த விதிகளுக்கான காலக்கெடு தேதி நவம்பர் 1 ஆக இருந்தது. இதையெல்லாம் உஷாராக கவனித்த ஆகாசா ஏர், ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா நிறுவனங்கள் கூடுதல் வேலையாட்களை நியமித்து பணிகளை சுலபமாக்கிக்கொண்டன. ஆனால், நம் நாட்டில் இயங்கி வரும் மிகப்பெரிய தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, இந்த விதிகளை எல்லாம் கண்டு கொள்ளாததாலும் கூடுதல் ஆட்களை நியமிக்காததாலும், தற்போது சிக்கலில் மாட்டிக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பல பயணிகளை விமான நிலையங்களில் புலம்ப வைத்துள்ளது.போதிய இடைவெளி கொடுக்காமல், மீண்டும் விமானத்தை இயக்க வேண்டும் என, நிறுவனத்தினர் ஒருபக்கம் அழுத்தம் கொடுக்க, அப்படி இயக்கினால் லைசென்ஸையே கேன்சல் செய்துவிடுவோம் என இந்திய விமான நிலைய ஆணையம் மறுபக்கம் நெருக்கடி கொடுக்க, லைசென்ஸை தற்காத்து கொள்ளும் மன நிலையில் இண்டிகோ விமான நிறுவன பைலட்டுகள் இருப்பதால் அந்த நிறுவனத்தின் விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. 12 மணி நேரத்தில் 65 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 8 மணிக்கு மேல் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.இதன் காரணமாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் டிக்கெட் கட்டணங்கள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. மதுரை, திருச்சி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு, டிக்கெட் கட்டணங்கள் 5 முதல் 6 மடங்கு வரை அதிகரித்ததால் அதிர்ச்சியடைந்த பயணிகள், ஏற்கனவே பிள்ளை குட்டிகளுடன் மணிக் கணக்கில் காத்துக்கிடக்கும் தங்களுக்கே எந்த முடிவும் தெரியாதபோது, மீண்டும் மீண்டும் போர்டிங் பாஸ் லைவிலேயே இருப்பது எந்தவகையில் நியாயம்? தங்கள் உடைமைகளைகூட மீட்க முடியவில்லை என கவுன்ட்டரில் இருந்த பெண் ஊழியர்களிடம் கேள்விக்குமேல் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் பெண் ஊழியர்களும் திணறினர். அதிலும், ஒரு பெண் விமானி தனது கையில் இருந்த நோட்டு ஒன்றை தூக்கி எறிந்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.ஜெட்வேகத்தில் உயர்ந்து கட்டணங்கள் ஒருபக்கம் அதிர வைக்கிறது என்றால் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் மறுபக்கம் பயணிகள் தங்கள் மனக்குமுறலை கொட்டி உள்ளனர்.விசாகப்பட்டினத்தில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக இருமுடி கட்டி வந்த ஒரு விமான பயணி, கொச்சிக்கு செல்வதற்கு விமானம் இல்லையென்பதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை என கவலை தெரிவித்தார்.அதேபோல், தேசிய அளவில் ஸ்கேட்டிங் விளையாடுவதற்காக விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்ட மாணவ-மாணவிகள் செல்ல முடியாமல் தவித்ததோடு, மாற்று ஏற்பாடாக பேருந்தில் செல்ல முடிவெடுத்தனர்.இன்டர்வியூ, குழந்தைக்கு அறுவை சிகிச்சை, படிப்பு, வயதான தாயை கவனித்துக்கொள்ள என பல்வேறு முக்கிய காரணங்களுக்காக, பயணம் மேற்கொள்ள இருந்த பயணிகள் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் வேதனையடைந்தனர்.கடந்த 2 நாட்களாக, விமான நிலையத்திலேயே சுற்றிக் கொண்டிருப்பதாக கூறிய ஒரு விமான பயணி, விமானங்களை தரையிறக்கக்கூட இடமில்லாத அளவுக்கு கீழே விமானங்கள் வரிசை கட்டி நிற்பதாகவும் 2 மணிநேரமாக வட்டமடித்துதான் ஒரு விமானம் தரையிறங்கியதாகவும் கூறினார்.நாடு முழுவதும், லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், விமானிகளுக்கான புதிய விதிமுறைகளை திரும்பப் பெறுவதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்தது. இதை அடுத்து இண்டிகோ விமான சேவை, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.