மத்திய பிரதேசத்தில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 6 குழந்தைகளுக்கு ஹச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்ட நிலையில், முறையாக ஆய்வு செய்யாமல் நோய் பாதித்த ரத்தத்தை குழந்தைகளுக்கு செலுத்தியதே காரணம் என சொல்லப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அந்த மருத்துவமனையில் ரத்த மாற்று சிகிச்சை பெற்றுக் கொண்ட பலருக்கும் நோய் தொற்று பரவி இருக்கலாம் என மருத்துவக் குழுவினர் சந்தேகப்படுவதால், மாநிலம் முழுவதும் அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது.மத்திய பிரதேச மாநிலம், சத்னா மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு மருத்துவமனை. மாவட்ட தலைமை மருத்துவமனை என்பதால், சுற்றுவட்டார கிராம மக்கள் அதிகளவில் வந்து சிகிச்சை பெறும் இடமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் எனப்படும் ஹச்.ஐ.வி. நோய் தொற்று கண்டறியப்பட்டது ஒட்டு மொத்த மாநிலத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் 3 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதே அதிர்ச்சியின் உச்சமாக இருக்கிறது. அதிலும், கடந்த ஜனவரி முதல் மே மாதத்தின் இடைப்பட்ட காலத்தில் குழந்தைகளுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டதாக சொல்லப்பட்டாலும், தற்போது தான் இந்த பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.முதற்கட்ட விசாரணையில், ஹச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளும் ஏற்கனவே தலசீமியா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. உடலில் தேவையான அளவு ஹீமோகுளோபின் மற்றும் ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியை தடுக்கும் மரபணு ரத்த நோயே தலசீமியா ஆகும். பெரும்பாலும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த மாற்று முறையே முதன்மை சிகிச்சையாக வழங்கப்படும். எனவே, இந்த சிகிச்சையின் போது தான் குழந்தைகளுக்கு ஹச்.ஐ.வி தொற்று பாதிக்கப்பட்ட ரத்தத்தை பணியாளர்கள் செலுத்தியிருக்கலாம் என சொல்லப்படுவது நெஞ்சை பதற வைக்கிறது. ஒருவரின் உடலில் ரத்தத்தை செலுத்தும் முன்பாக, ரத்தம் ஒத்துபோகிறதா என்பதை தாண்டி ரத்தம் வழங்கியவருக்கு ஏதேனும் நோய் உள்ளதா என கேட்டறிவதோடு, பலமுறை ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே உடலில் செலுத்தப்படுவது வழக்கம். இப்படி இருக்கையில், குழந்தைகளுக்கு ஹச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தத்தை செலுத்தியது எப்படி என கேள்வி எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 30க்கும் மேற்பட்ட முறை ரத்தம் மாற்றப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், சத்னா மட்டுமின்றி பிற மாவட்டங்களில் செயல்படும் ரத்த வங்கிகளில் இருந்தும் ரத்தம் பெறப்பட்டுள்ளதால், எங்கு தவறு நடந்தது என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சத்னா மருத்துவமனையில் இருந்து இதேபோல் 57 தலசீமியா நோயாளிகளுக்கு ரத்தம் வழங்கப்பட்டதும் கண்டறியப்பட்டதால் மேலும் பலருக்கு நோய் தொற்று இருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனால் அவர்களை அடையாளம் கண்டறிந்து பரிசோதனை செய்யும் பணியில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் குழந்தைகளுக்கு ரத்தம் வழங்கிய கிட்டத்தட்ட 350 பேரை அடையாளம் கண்டு பரிசோதிக்கவும், அவர்கள் இதுவரை யாருக்கெல்லாம் ரத்தம் வழங்கியுள்ளனர் என்ற விவரங்களை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே முதற்கட்டமாக மருத்துவமனையின் ரத்த வங்கி பிரிவில் பணியாற்றும் மருத்துவர், ரத்த வங்கியின் பொறுப்பாளர் மற்றும் ஆய்வகப் பணியாளர்கள் இருவர் என மொத்தமாக 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் மத்திய பிரதேச அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குடித்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான அதிர்ச்சி மறையும் முன்பாகவே, மற்றொரு பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருப்பது மாநில சுகாதாரத்துறை மீது மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.