மக்கள், காலனி ஆதிக்க மனப்பான்மையில் இருந்து விடுபட்டு, தேசியவாத சிந்தனையை தழுவ நமது அரசியலமைப்பு சட்டம், ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது என்று, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறினார். அரசியலமைப்பின் 75ஆவது தினத்தை ஒட்டி, நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு மைய மண்டபத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.குடிமக்களின் தனிநபர் மற்றும் ஜனநாயக உரிமைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்களின் நோக்கம் எனவும் திரவுபதி முர்மு கூறினார். அரசியலமைப்பு தினத்தில், ஒன்பது மொழிகளில் தயாரான அதன் டிஜிட்டல் வடிவத்தை குடியரசு தலைவர் வெளியிட்டார். பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.