சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியது நடுத்தர மக்களை கலக்கத்தில் ஆளாக்கியிருக்கிறது. தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன? இனிமேல் குறைய வாய்ப்பு இருக்கிறதா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்திதொகுப்பு. ஒரு சவரன் தங்கம் சீக்கிரமே ஒரு லட்சத்தை எட்டும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்தது தற்போது உண்மையாகி விட்டது. சில ஆண்டுகளாக தங்கம் விலையை கேட்டாலே நடுத்தர குடும்பத்தினருக்கு நடுக்கமே வந்து விடும் போல.அந்த வகையில், அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 97 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.அப்போதே, அடுத்த சில நாட்களிலேயே தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயை எட்டும் என கணிக்கப்பட்டது. ஆனால், இடையில் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டது. படிப்படியாக குறைந்து வந்த தங்கம், கடந்த நவம்பர் மாதம் 5ஆம் தேதி வாக்கில் ஒரு சவரன் 89 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சரிவை நோக்கி தங்கம் விலை சென்றது சற்று நிம்மதியை கொடுத்த நிலையில், மீண்டும் தங்கம் விலை ஏற தொடங்கியது. ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் என தங்கம் விலை ஏறியது திடுக்கிட வைத்தது. இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையன்று காலையிலேயே தங்கம் விலை ஏற்றத்தில் தான் இருந்தது. காலை நிலவரப்படி, கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து, 12 ஆயிரத்து 460 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து 99 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இப்படி காலையிலேயே கதிகலங்க வைத்த தங்கம் விலை மாலையிலேயே உச்சத்தை நோக்கி நகர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. எல்லாரும் கணித்தது போல கடைசியாக ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயை தாண்டி விட்டது.திங்களன்று, பிற்பகல் நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 55 ரூபாய் அதிகரித்து 12 ஆயிரத்து 515 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 440 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.சொல்லப்போனால், கடந்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதி 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், இந்த ஆண்டு அப்படியே இரு மடங்கு அதிகரித்து ஒரு லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது. ஒன்றரை ஆண்டுகளிலேயே இவ்வளவு விலை ஏற்றம் என்பது விழிபிதுங்க வைத்துள்ளது.தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் காலை, மாலை என இரு வேளைகளிலும் உயர்ந்துள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக திங்கட்கிழமை மட்டும் வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்துள்ளது. சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக நாளுக்கு நாள் தங்கம் விலை மாறி வருகிறது. உலக பொருளாதாரத்தில் நிகழும் மாற்றம் காரணமாகவும், டாலரின் மதிப்பை பொறுத்தும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும் நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்து இருப்பதால், தங்கத்தின் விலையும் உயருவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறினர். மேலும், தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதாலும் விலை அதிகரித்து வருகிறது. தங்கத்தின் நுகர்வு அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தங்கம் பெரிய சேமிப்பாக பார்க்கப்படும் நிலையில், விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது நடுத்தர மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.முன்பெல்லாம் குக்கிராமங்கள் என்றால் 30 பவுனுக்கு குறையாமலும், நகரப் பகுதிகள் என்ற 50 சவரனுக்கு அதிகமாகவும் சீர் வரிசையாக கொடுத்து திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்து வரும் நிலையில், விலை ஏறும் போக்கை பார்த்தால் 5 சவரனுக்கே முடியாத நிலை தான் இருக்கிறது.ஒரு சவரன் தங்கமே ஒரு லட்சம் ரூபாய் என்ற இமாலய உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், கிட்டத்தட்ட கார் விலைக்கு ஈடாக தங்கம் விலையும் உயர்ந்துள்ளது. சுசூகி போன்ற நிறுவனங்களின் சாதாரண LOW END MODEL விலையே 5 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது என்ற நிலையில், 5 சவரன் நகை இருந்தால் கார் வாங்கி விடலாம் என்ற அளவுக்கு நிலைமை வந்து விட்டது.தங்கம் விலை எகிறிக் கொண்டே செல்வதால் இனிமேல் நடுத்தர மக்கள் தங்கம் வாங்கவே முடியாதோ என புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த காலத்தில் சிறுவாடு காசு சேர்த்து வைத்து கூட பெண்கள் தங்கம் வாங்கியிருக்கிறார்கள் என்ற நிலையில், தற்போது ஒரு சவரன் தங்கம் வாங்க லட்சக்கணக்கில் சேமிக்க வேண்டும் என கேட்கும் போதே கவலை தான் தொற்றிக் கொள்கிறது.