மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடருக்காக இந்தியாவின் முதல் ஃபார்முலா-1 ஓட்டுநருடன் இணைந்து நடிகரும், ரேசருமான அஜித்குமார் பயிற்சியில் ஈடுபட்ட காணொலி, இணையத்தை கலக்கி வருகிறது. அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்திருக்கும் வீடியோ மற்றும் ஃபோட்டோக்களைப் பார்த்த ரசிகர்கள், லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். ஆசிய லெ மான்ஸ் (Asian Le Mans) தொடருக்கான முன்னோட்டம் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா சர்க்யூட் பகுதியில் நடந்தது. நேற்றும் இன்றும் நடந்த முன்னோட்ட பயிற்சியில் டீம் அஜித்ரேடண்ட் (Team AjithRedant) மற்றும் டீம் விரேஜ் (Team Virage) பங்கேற்றன. இந்தியாவின் முதல் ஃபார்முலா-1 ஓட்டுநரான நரேன் கார்த்திகேயனும் (Narain Karthikeyan), அஜித் குமாரும் இணைந்து இந்த தொடரில் பங்கேற்க இருப்பது இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. ரேசர் அஜித் குமாரின் குழு LMP3 பிரிவில், டீம் விரேஜ் உடன் இணைந்து பந்தயத்தில் ஈடுபட உள்ள நிலையில், நரேன் கார்த்திகேயன், அஜித்குமார் தவிர ரேசர்கள் ஜூலியன் கெர்பி (Julian Gerbi), ரோமன் வோஸ்னியாக் (Romain Vozniak) ஆகியோரும், இவர்கள் அணி சார்பில் களமிறங்குகின்றனர். டிசம்பர் 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மலேசியாவில் உள்ள செபாங் சர்வதேச சர்க்யூட்டில் நடக்கும் ஆசிய லெ மான்ஸ் தொடரில் முக்கிய குழுக்கள் பங்கேற்க இருக்கும் நிலையில், அஜித்குமாரின் டீம் வெல்லுமா? என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தான் தனது டீமுடன் முன்னோட்ட பயிற்சியில் அஜித்குமார் ஈடுபட்டிருந்த வீடியோவை, சுரேஷ் சந்திரா பகிர்ந்தார். இதனை பலரும் வேகமாக ஷேர் செய்து உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.