தமிழகத்தில், அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களை வளர்த்தெடுத்தால் தான் மாநிலம் வளரும் என்றார். அதோடு, மனித சமுதாயத்திற்கு காலம் தந்துள்ள இரண்டாவது நெருப்பு தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்ற முதலமைச்சர், செயற்கை நுண்ணறிவால் ஒருபோதும் மனிதர்களை REPLACE செய்து விட முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.உலகம் முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப கல்லூரி மாணவர்கள் தங்களை பக்குவப்படுத்தி கொள்ளும் விதமாக, விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த திட்டத்தின் தொடக்க விழா ”உலகம் உங்கள் கையில்” எனும் கருப்பொருளில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் சாராம்சத்தை பிரதிபலிக்கும் வகையில் மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்திழுக்க, அரசின் சாதனைகளை விளக்கும் காணொலி, நிகழ்ச்சிக்கு மேலும் அழகூட்டின.தமிழக அரசின் நிதியுதவி மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி வெற்றி கண்டவர்களை மேடையேற்றி கௌரவப்படுத்தியது உலகம் உங்கள் கையில் நிகழ்ச்சி. குறிப்பாக, ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு போட்டியாக டி-மேன் (D-MAN ) எனும் செயலியை உருவாக்கிய சிவகங்கையை சேர்ந்த சுரேஷ் குமார் மற்றும் ஜி-பே, போன்பே-வுக்கு மாற்றாக இப்போ பே (IPPO -PAY) செயலியை உருவாக்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த மோகன் ஆகியோர் தாங்கள் கடந்து வந்த பாதையை எடுத்துக் கூறி மாணவர்களுக்கு உத்வேகம் கொடுத்தனர்.இதற்கிடையே நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் பலத்த கர கோஷங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.தொடர்ந்து ”உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதி, அடுத்த தலைமுறைக்கு மிக அவசியமான கல்வியை கொடுப்பதன் மூலம் அவரின் குடும்பம் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்து செல்ல முடியும் என்றார்.பின்னர் பேசிய நடிகர் கார்த்தி, வாழ்க்கையில் நாம் நினைத்ததை போல் எதுவும் நடக்காது என்பதால் கல்வியை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும் என அட்வைஸ் வழங்கினார். இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2025-26 கல்வியாண்டில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், தொழில்துறை போன்ற துறைகளில் பயிலும் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. இதில் முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு Dell, Acer, HP போன்ற உலகத் தரத்திலான நிறுவனங்களின் அதி நவீன மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD Storage, Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS மென்பொருள் இந்த மடிக்கணினிகளில் நிறுவப்பட்டுள்ளன. அத்துடன் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro–வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்கிய பின் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப் செலவு கிடையாது, முதலீடு என்றார். மனித சமுதாயத்திற்கு காலம் தந்துள்ள இரண்டாவது நெருப்பு தான் செயற்கை நுண்ணறிவு என்ற முதலமைச்சர், செயற்கை நுண்ணறிவால் ஒருபோதும் மனிதர்களை REPLACE செய்து விட முடியாது என திட்டவட்டமாக கூறினார்.இந்த மடிக்கணினிகளை படம் பார்க்க, ஆன்லைன் விளையாட்டுகளுக்காக பயன்படுத்தாதீர்கள் என மாணவர்களிடம் கேட்டுக் கொண்ட முதலமைச்சர், தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்றைய காலகட்டத்தில் ஒரு லேப்டாப், இணைய வசதி, புதிய யோசனை இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்றார். எனவே தமிழக அரசு வழங்கும் மடிக்கணினிகள், மாணவர்களின் வாழ்க்கையில் Game changer ஆக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், கல்லூரி மாணவர்களின் வாக்கு, நிச்சயம் சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படும் நிலையில், தமிழக அரசின் இந்த மடிக்கணினி வழங்கும் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.