தமிழகத்தில், பெரும்பாலான தேர்தல்களில், திமுகவும், அதிமுகவும் ஆட்சிக் கட்டிலில் அமர கூட்டணி தான் கை கொடுத்திருக்கிறது என்ற நிலையில், வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில், தற்போது இருக்கும் கூட்டணியை அப்படியே தக்க வைக்க திமுகவும், கூட்டணியை இன்னும் பலப்படுத்த அதிமுகவும் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன.இந்த நிலையில், திமுக, அதிமுக கூட்டணியின் சாதக, பாதகங்கள் என்னென்ன? த.வெ.க. தலைமையிலான கூட்டணியில் யார் யார் இணைய வாய்ப்பு இருக்கிறது? என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.தங்களது கூட்டணி பலமாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மெகா கூட்டணி அமையும் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்-ம் கூறி வருகின்றனர். இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தனி கவனம் செலுத்தி வருகின்றன. பலமான கூட்டணி இருந்தாலே பாதி வெற்றி உறுதி செய்யப்பட்டு விடும் என்பதே இரு பிரதான கட்சிகளின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த சூழலில் இரு தரப்பு கூட்டணியின் சாதக, பாதகங்கள் குறித்து பார்க்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, முஸ்லீம் லீக், கமலின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணியில் இருந்து யாரும் பிரிந்து செல்ல வாய்ப்பு இல்லை என்ற நிலையில், மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. ஏற்கனவே, திமுக கூட்டணியில் 9 கட்சிகள் இருக்க, மேலும் சில கட்சிகளும் சேரும் பட்சத்தில் தொகுதிகளை பிரித்துக் கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து திமுக கூட்டணியில் பயணித்து வரும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்போம் என கூறி வருகின்றன.ஒற்றை இலக்கத்தில் போட்டியிட்ட கட்சிகள், இரட்டை இலக்கத்தை கேட்டு வாங்குவோம் என பேசி வரும் நிலையில், உதயசூரியன் சின்னம் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது.கொள்கையால் சேர்ந்த கூட்டணிக்காக தொகுதிகளை இழக்க திமுக தயாராகுமா? அல்லது அனுசரித்து செல்ல கூட்டணி கட்சிகளை நிர்பந்திக்குமா? என்பது அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தான் தெரியவரும். அதே சமயம், அதிமுக கூட்டணியில் தற்போதைக்கு சொல்லிக் கொள்ளும் படியாக பாஜகவும், தமிழ் மாநில காங்கிரஸும் மட்டுமே இடம் பெற்றுள்ளன. வரும் நாட்களில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைய சாத்தியங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் தொகுதி பங்கீடு சுமூகமாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது.கடந்த 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி சாத்தியமானது. வருகிற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக ஐக்கியமானாலும் தற்போது பாமகவில் நிலவும் குழப்பமான சூழலை வைத்தும், கடந்த தேர்தலின் வெற்றியை வைத்தும் தான் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதால், கூட்டணிக்காக, இரட்டை இலை களம் காணும் தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது என சொல்லப்படுகிறது. அதேபோல, கடந்த தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக, 4 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றது என்ற நிலையில், வெற்றி வாய்ப்பை வைத்து தொகுதிகளை ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் இடங்களைக் கேட்டு அதிமுகவை நெருக்குவதற்கும் வாய்ப்பு உண்டு. தொகுதி பங்கீடு அதிமுகவுக்கு சாதகமாக இருந்தாலும், கட்சி தொடர்பான பூசல்கள் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிமுக, அணி, அணியாக பிரிந்து கிடப்பது போன்ற தோற்றம் இன்னும் மாறாததால் தேர்தலில் அதுவும் பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுகவில் அப்படியான நிலை எதுவும் இல்லை என்பது சாதகமாக பார்க்கப்படுகிறது. கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பிரச்சனை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற நிலையில், அந்த புள்ளியில் அதிமுக கோட்டை விடுவதாக பார்வை முன் வைக்கப்படுகிறது.முக்கியமாக, OPS, TTV போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நின்று பேசுவது மீண்டும் மீண்டும் அதிமுகவை பலவீனப்படுத்தும் வகையில் இருப்பதும் மைனஸாக பார்க்கப்படுகிறது.இது ஒரு பக்கம் இருக்க, புதிதாக களத்திற்கு வந்திருக்கும் த.வெ.க. தலைமையிலான கூட்டணி குறித்தும் பார்க்க வேண்டியுள்ளது. விஜய்யை முதலமைச்சராக ஏற்பவர்களோடு மட்டும் தான் கூட்டணி என த.வெ.க. திட்டவட்டமாக இருக்கும் நிலையில், தற்போதைய நிலவரப்படி தேமுதிக, டிடிவி தினகரனின் அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தான் இன்னும் கூட்டணியை உறுதி செய்யாமல் உள்ளன.அந்த வகையில், திமுக எதிர்ப்பு என்ற புள்ளியாலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மன நிலைமையாலும் டிடிவி தினகரன் விஜய் பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதோடு, பாமகவும் திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பாமக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டதும் கூட்டணிக்கான சமிஞையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.ஏற்கனவே விஜய்க்கும், அன்புமணிக்கும் நெருக்கமான நட்பு இருக்கும் நிலையில், அந்த நட்பு கூட்டணியாக உருமாறலாம் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது போக, தேமுதிகவும் விஜய் தரப்பிடம் நல்ல இணக்கமாக தான் இருக்கிறது.ஆனாலும், தேமுதிக வருகிற தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களை பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், புதிய கட்சியான விஜய்யுடன் கை கோர்க்கும் முடிவை எடுப்பார்களா? என்பதும் சந்தேகத்திற்குள்ளானது. திமுக, அதிமுக, த.வெ.க.வின் கூட்டணி கணக்குகள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் யார் கூடவும் சேராமல் தனி வழியில் நிற்கும் சீமான், இந்த முறையும் தனித்து தான் நிற்போம் என அறிவித்து 100 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலே ரிலீஸ் செய்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.