மும்பை நகரம் மகாராஷ்டிராவுக்கு சொந்தமான நகரம் மட்டுமல்ல என்ற அண்ணாமலையின் பேச்சு மகராஷ்டிரா அரசியலில் பூகம்பத்தை கிளப்பியுள்ள நிலையில், பால் தாக்கரே தமிழர்களை குறிவைத்து அநாகரிகமாக முன்வைத்த முழக்கத்தை ராஜ்தாக்கரே எழுப்பி விமர்சித்திருப்பது மும்பை வாழ் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ஒற்றை கருத்தால் மகாராஷ்டிரா அரசியலில் பூகம்பம் கிளம்பி அரசியல் சூட்டை அதிகரித்திருக்கிறது.மகாராஷ்டிரா மாநில அரசியல் மட்டும் யாரும் கணிக்க முடியாத அரசியல் திருப்பங்களும், பரபரப்புக்கு பஞ்சமில்லாத அதிரடி மாற்றங்களும் அடிக்கடி நிகழ்வதுண்டு. அப்படியொரு மாற்றத்தை தந்தது தான் தற்போதைய மாநகராட்சி தேர்தல். இனி சேரவே மாட்டார்கள் என்று கணிக்கப்பட்ட ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே ஒன்றாக இணைந்ததை போலவே சரத் பவாரும் அஜித் பவாரும் தற்போது இணைப்புக்கு எட்டிய தூரத்தை அடைந்திருக்கின்றனர்.இந்நிலையில் தான், மும்பை மாநகராட்சியை கைப்பற்றும் போட்டியில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வரும் நிலையில், தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியில் அண்ணாமலையை இறக்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியிருக்கிறது பாஜக தேசிய தலைமை. அதன்படி, பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை, மும்பை மகாராஷ்டிராவுக்கு சொந்தமான நகரம் மட்டுமல்ல, அது சர்வதேச நகரம் என்றும், ஆண்டுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் மிகப்பெரிய மாநகராட்சி எனவும் அதன் வளர்ச்சி குறித்தும் பெருமையாக பேசியிருந்தார்.மும்பையை பெருமைப்படுத்தும் வாதத்தை கைவிட்ட எதிர்க்கட்சிகள், மும்பை மகாராஷ்டிராவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்ற அண்ணாமலையின் கருத்தை மட்டும் துண்டாக தூக்கி மொழி மண் சார்ந்த பிரச்னையாக மாற்றி அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர் தாக்கரே வாரிசுகள். இதுகுறித்து தேர்தல் பரப்புரை ஒன்றில் பேசிய மகராஷ்டிரா நவநிர்மான் சேவா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டிலிருந்து வந்த ரசமலாய் மும்பைக்கும் மகாராஷ்டிராவுக்கும் சம்மந்தமில்லை என்கிறார். முதலில் அவருக்கும் இந்த மண்ணும் என்ன சம்மந்தம் என கேள்வி எழுப்பினார். அதோடு அநாகரிகமாக தனிமனித தாக்குதலில் ஈடுபட்ட அவர், தமிழர்களை துரத்தியடிக்கும் நோக்கத்தோடு பால் தாக்கரே அறுபதுகளில் முன்வைத்த முழக்கத்தை பேசி, ஆத்திரத்தை கொட்டித்தீர்த்தார்.இதே போல உத்தவ் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவிலும் அண்ணாமலை மும்பைக்குள் கால்வைத்தால் அவரது கால்கள் துண்டாக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இதுதவிர, ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத் உள்ளிட்ட பலரும் அண்ணாமலை கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அவரை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில், தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, தாம் மீண்டும் மும்பைக்கு வர உள்ளதாகவும் முடிந்தால் தனது கால்களை வெட்டிப் பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார். அதோடு தாக்கரே குடும்பத்தினரே மேடை போட்டு திட்டும் அளவுக்கு தாம் வளர்ந்துள்ளதாகவும் பெருமிதம் கூறினார்.மும்பையில் மராத்தியர்களை காட்டிலும் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வந்ததும், அங்கு அனைத்து துறைகளிலும் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தியதையும் கண்டு ஆத்திரமுற்ற பால் தாக்கரே மராத்தியர்களுக்கே மும்பை சொந்தம், என்ற முழக்கத்தை முன்வைத்து மராத்தி இளைஞர்களை திரட்டி, தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வித்திட்டதாக வரலாறு கூறுகிறது. பன்முகத்தன்மை கொண்ட மும்பையில் பல தசாப்தங்கள் கழித்து மொழி ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வகையிலான ஒரு வாக்கியத்தை மீண்டும் ராஜ்தாக்கரே முழங்கியிருப்பது, அங்கு வாழும் தமிழ் மக்களிடையே பீதியை உண்டாக்கியிருக்கிறது. மும்பை அடைந்திருக்கும் வளர்ச்சியில் பெரும்பான்மையான பங்களிப்பு தமிழர்களுடையது தான். ஆனால் அதை புறந்தள்ளிவிட்டு இன ரீதியான அரசியலை முன்னெடுத்துள்ள ராஜ் தாக்கரேவுக்கு தமிழ் அமைப்புகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.இதையும் பாருங்கள் - தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு