சென்னை, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் கீர்த்தனா, பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய போதிலும், கேரம் விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தால், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கணவரை இழந்த பெண், வீட்டு வேலை பார்த்து போராடி, தன் மகளை சாம்பியன் ஆக்கியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...சென்னை, புது வண்ணாரப்பேட்டை செரியன் நகர் 2ஆவது தெருவை சேர்ந்தவர் இளம் பெண் கீர்த்தனா. தந்தையை இழந்த கீர்த்தனா, குடும்ப சூழ்நிலை காரணமாக, 10ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்தியுள்ளார். தாயும் வீட்டு வேலை பார்த்து, அதில் வரும் வருமானம் மூலம் தனது இரண்டு மகன்களையும், மகள் கீர்த்தனாவையும் வளர்த்து வந்தார். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்ட மூத்த மகனும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஜவுளிக் கடையில் வேலை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். நான்கு பேர் கொண்ட வீட்டில், போதுமான அளவு இட வசதி இல்லாமல் சிரமப்பட்டே அன்றாட வாழ்க்கையை நடத்தியுள்ளனர். மேலும், மழைக்காலங்களில் வீட்டின் மேலிருந்து மழைநீர் ஒழுகுவதால் மிகுந்த சிரமப்பட்டும் வந்துள்ளனர்.சிறு வயது முதலே கேரம் விளையாட்டில் ஆர்வம் கொண்ட கீர்த்தனா குடும்ப சூழ்நிலை காரணமாக, பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினாலும், தொடர்ந்து கேரம் விளையாட்டை கைவிடாமல் தொடர்ந்துள்ளார். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, அவ்வப்போது பரிசுகளையும் வென்று வந்துள்ளார் இளம் வீராங்கனை கீர்த்தனா.ஒருபுறம் பரிசுகளை குவித்து வந்தாலும், மற்றொரு புறம் கேரம் போட்டிகளில் பங்கேற்க நிதியுதவி இல்லாமல் வீராங்கனை கீர்த்தனா மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். மாலத்தீவில் ஏழாவது கேரம் போர்டு உலக சாம்பியன்சிப் போட்டியில் பங்கேற்க விருப்பப்பட்ட கீர்த்தனா, முறையான SPONSER இல்லாமல் தடுமாறியுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கீர்த்தனா பங்கேற்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆகியோர் பொருளாதார ரீதியாக உதவி செய்துள்ளனர். பின்னர், உலக சாம்பியன்சிப் போட்டியில் தனிநபர் பிரிவு, குழு பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை கீர்த்தனா, மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். தனது வீடு, போதுமான அளவு வசதியின்றி உள்ளதால் அரசு புது வீடு கட்டித்தர வேண்டும் என்று வீராங்கைனை கீர்த்தனா அரசுக்கு கோரிக்கை வைத்தார். மேலும், தன்னை போன்று பல மாணவர்கள் கேரம் விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.மழை பெய்தால் வீடு ஒழுகும் நிலையில் உள்ளதால், தன் மகள் பெற்ற கோப்பைகளை பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் மூடி வைத்து பாதுகாத்து வருவதாக கூறிய தாய் இந்திராணி, மகள் தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.