இரட்டை இலை சின்னம் தொடா்பான விசாரணையை தமிழக சட்டப்பேரவை தோ்தல் அறிவிப்புக்கு முன்பாக நடத்தி முடிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த புதிய மனுவில், கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டால் வழக்கு விசாரணை நீா்த்துப்போய் விடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வரும் 2026 சட்டப்பேரவை தோ்தல் அறிவிப்புக்கு முன்பாக, இந்த பிரச்னைக்கு தீா்வு காண தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.