அதிமுக கூட்டணியில், 50 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருக்கும் பாஜக, எந்தெந்த தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்ற சர்வே டேட்டாவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க முடிவு செய்திருப்பதாக, கமலாலய வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. 20 MLAக்கள் டார்கெட் என்ற இலக்குடன் களமிறங்கும் பாஜகவின் 2026 தேர்தல் சீக்ரெட் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.தமிழ்நாட்டில், தேர்தலுக்கு நான்கைந்து மாதமே இருக்கும் நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் வேகமெடுத்துள்ள சூழலில், அதிமுக - பாஜக கூட்டணியிலும் முக்கியமான நகர்வுகள் தென்பட தொடங்கியுள்ளன. பீகார் மாநில தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு தமிழ்நாட்டை குறி வைத்து தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கிறது பாஜக. ஏற்கனவே, அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்து விட்ட பாஜக, 20 எம்.எல்.ஏ.க்கள் டார்கெட் என்ற இலக்குடன் 2026 தேர்தலை எதிர் கொள்ள, அமித்ஷா வியூகம் வகுத்திருப்பதாக சொல்கிறார்கள்.அந்த வகையில், அதிமுகவிடம் 50 தொகுதிகளை கேட்க பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றி பெற வாய்ப்பு என்ற அடிப்படையில் சர்வே நடத்திய பாஜக, மொத்தமாக 54 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வாக்குகளை அடிப்படையாக வைத்து இந்த 54 தொகுதிகள் கொண்ட பட்டியலை பாஜக தயார் செய்திருக்கிறது. 26 மக்களவை தொகுதிகளில் பாஜகவுக்கு 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையில் வாக்குகள் கிடைத்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், அதிலிருந்து 54 சட்டமன்ற தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அமித்ஷா தமிழகம் வரும் நிலையில், அந்த விசிட்டின் போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது. இந்த வகையில், சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை எந்தெந்த தொகுதிகளை பாஜக அடையாளம் கண்டுள்ளது என்ற தகவலும் கசிந்துள்ளது. சென்னையில் மட்டும் 8 தொகுதிகளுக்கு பாஜக குறி வைத்துள்ளது.மத்திய சென்னையில் எழும்பூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, வட சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர், தென் சென்னையில் மயிலாப்பூர், தியாகராய நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளை கேட்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கோவையை பொறுத்தவரையில், கடந்த முறை பாஜகவுக்கு வெற்றியை கொடுத்த கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர் ஆகிய 5 தொகுதிகளை கேட்கலாம் என கருதப்படுகிறது. கன்னியாகுமரியை பொறுத்தவரையில், அங்கு ஏற்கனவே பாஜக பலமாக இருக்கும் நிலையில், வருகிற தேர்தலில் குளச்சல், குமரி, கிள்ளியூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய தொகுதிகள் அந்த பட்டியலில் இடம்பெற்று இருப்பதாக சொல்கிறார்கள்.இதேபோல, நெல்லை மாவட்டத்திலும் ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு பாஜக விருப்பம் தெரிவித்திருக்கிறதாம்.வட மாவட்டம், மேற்கு மாவட்டம், தென் மாவட்டங்களில் பரவலாக முக்கிய தொகுதிகளை பட்டியலில் வைத்திருக்கும் பாஜக, டெல்டா மாவட்டங்களில் இருந்து எந்த தொகுதியையும் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.சென்னையில் மட்டும் 8 தொகுதிகளை குறி வைத்து பாஜக, காய் நகர்த்தி வருவது அதிமுகவுக்கு அதிர்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுகவின் கோட்டையாக சென்னை பார்க்கப்படும் நிலையில், அங்குள்ள 8 தொகுதிகளை பாஜக கேட்பது வெற்றி வாய்ப்பை எப்படி சாத்தியப்படுத்தும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இது ஒரு பக்கம் இருந்தாலும், வட மற்றும் மத்திய சென்னையில் வட மாநிலத்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவு வசித்து வரும் நிலையில், அந்த வாக்குகள் பாஜகவுக்கு வரலாம் எனவும் கணிக்கப்படுகிறது. இதுபோக, தென் சென்னையில் பாஜகவின் ஆதரவு வாக்கு வங்கியாக பார்க்கப்படும் குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகளவில் வசித்து வருவதும் அந்த கட்சிக்கு பலமான விஷயமாக பார்க்கப்படுகிறது.இதேபோல, கொங்கு மண்டலத்திலும் கிணத்துக்கடவு, வால்பாறை, ராசிபுரம், குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை தெற்கு, பல்லடம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பவானி ஆகிய தொகுதிகளை பாஜக கேட்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக இருந்தாலும், சமீப காலமாக பாஜகவும் அங்கு வேகமாக காலூன்றி வருகிறது. இந்து முன்னணி போன்ற பாஜகவின் கிளை அமைப்பினர் வலுவாக இருப்பதால் அதை வைத்து வெற்றியை சாத்தியப்படுத்தலாம் என்பது பாஜகவின் யோசனையாக உள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுக எளிதாக வெற்றி பெறும் தொகுதிகளை பாஜகவுக்கு விட்டுக் கொடுக்குமா? என்பதும் சந்தேகம் தான். ஆகையால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.கடந்த முறை, பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், நான்கில் மட்டுமே வெற்றி பெற்றது என்பதால் இந்த முறை அதிக தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.இன்னொரு பக்கம் வருகிற 2026 தேர்தல் அதிமுகவுக்கு மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.ஆகையால், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அதிமுகவும் விரும்பும் என்பதால், பாஜக கேட்கும் தொகுதிகளை அப்படியே தூக்கி கொடுக்க வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது.தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமையாக அதிமுக இருந்து வரும் நிலையில், பாஜக கேட்கும் தொகுதிகளை அப்படியே கொடுக்க வாய்ப்பு இல்லை என்றாலும், அதிகபட்சம் 30 தொகுதிகளை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கலாம் எனவும் எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.