புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் முட்டைகள் என்ற தலைப்பில் வெளிவந்த யூட்யூப் வீடியோ, முட்டை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்த நிலையில், நாடு முழுவதும் முட்டைகளின் தரம் குறித்து ஆராய்வதற்கான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இப்படி பெரும் அபாயத்தை உண்டு பண்ணும் அளவுக்கு முட்டையில் கலந்திருந்த வேதிப்பொருள் என்ன? அதன் விளைவுகள் என்ன? மருத்துவர்களின் விளக்கம் உள்ளிட்டவை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...ஏழைகள் முதல், வசதி படைத்தவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடும் உணவுகளின் பட்டியலில் முந்திக் கொண்டு நிற்பது முட்டை மட்டும் தான். குறைந்த விலையில் அதிக புரோட்டின்களை அள்ளித் தருவதால் தான் தமிழ்நாட்டில் பள்ளிகளில் மதிய உணவோடு சேர்த்து முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோழி முட்டை மனிதர்களின் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், சமீப நாட்களாக முட்டையை பற்றி பரவி வரும் தகவல் மக்களுக்கு பீதியை உண்டாக்கி உள்ளது.கடந்த வாரம் Trustified என்ற யூ-ட்யூப் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவில், உயர்தர மற்றும் 100% ஆண்டிபயாடிக் இல்லாதது என்று விளம்பரப்படுத்தப்படும் எக்கோஸ் நியூட்ரிஷியன் (Eggoz Nutrition) முட்டைகளில், தடை செய்யப்பட்ட மற்றும் புற்றுநோயைத் தூண்டும் நைட்ரோஃபுரான் என்ற வேதிப்பொருளின் எச்சங்கள் இருப்பதாக கூறப்பட்டிருந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வீடியோ வெளியான அடுத்தடுத்த நாட்களில் முட்டை விற்பனை கடும் சரிவை சந்தித்தது. அடித்தட்டு மக்களுமே புற்றுநோய் அச்சத்தால் முட்டையை சாப்பிடவே அஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள், வேகமாக வளர்ச்சி அடைவதற்காக ஆன்டிபயாடிக் செலுத்துவது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டிருக்கும் சூழலில், எப்படி முட்டையில் அந்த வேதிப்பொருள் கலந்திருக்கும் என்ற கேள்வி ஆணித்தரமாக முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில், இந்தியா முழுவதும் முட்டைகளின் தரம் குறித்து ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது.இந்த நிலையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 11 குழுக்களாக பிரிந்து கோழி முட்டைக்கு பெயர் போன நாமக்கல் மாவட்டத்தில் முகாமிட்டு சுமார் 55க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளுக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மாதிரிக்காக தலா பத்து முட்டைகளையும் அதிகாரிகள் எடுத்துச் சென்று வேதியியல் ஆய்வுக்கு அனுப்பியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த ஆய்வின் அடிப்படையில் நைட்ரோஃபுரான் பயன்படுத்தப்பட்டதா என தெரியவரும்.நைட்ரோஃபுரோன் என்பது இந்தியாவில் தடைசெய்யப்பட்ட வேதிப்பொருள் எனக்கூறும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க மாநில தலைவர் சிங்கராஜ், தமிழ்நாட்டில் நூறு சதவீதம் அதுபோன்ற எந்த கெமிக்கலும் பயன்படுத்துவதில்லை என அடித்து கூறுகிறார். முட்டை விலை ஏறியதால் ஒரு சிலர் வதந்தி பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதுவரை ஆய்வுக்கு உட்படுத்திய எந்த முட்டைகளிலும் சந்தேகப்படும் படியான ஆன்டிபயாடிக்ஸ் கண்டறியப்படவில்லை என கூறும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை அலுவலர் தங்க விக்னேஷ், இருந்த போதிலும் ஆய்வை தொடருவதாகவும் தெரிவித்தார்.முட்டை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிவரும் வதந்திகளுக்கு பதிலளித்திருக்கும் மருத்துவர் பாண்டுரங்கன், முட்டையில் நைட்ரோஃபுரான் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் அளவு குறைவாக இருப்பதால் அது நம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என தெளிவுபடுத்தியுள்ளார்.