பொங்கல் பண்டிகையை ஒட்டி, விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் அடுத்தடுத்த நாளில் ரிலீஸ் ஆக இருப்பது, சினிமா வட்டாரத்தை தாண்டி அரசியலிலும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. முழுக்க, முழுக்க அரசியல் வசனம் கலந்த கமர்ஷியல் படமான ஜனநாயகனுக்கு போட்டியாக இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக கொண்ட பராசக்தி படமும் களத்தில் குதித்திருப்பது 2026 தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் ரேஸில் ஜனநாயகனும், பராசக்தியும் மோத இருப்பது சினிமா ரசிகர்களுக்கு விருந்து என்பதை தாண்டி, இரு படங்களும் என்ன மாதிரி அரசியல் பேச போகிறது என்ற எதிர்பார்ப்பு தான் மேலோங்கியிருக்கிறது.நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த ஜனநாயகன் படம், 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து பொங்கலுக்கு மாற்றப்பட்டது.விஜய்யின் அரசியலை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் வகையில் ஜனநாயகனில் வசனங்கள் இடம் பெற்றிருக்கும் நிலையில், படத்தை தேர்தலை ஒட்டி வெளியிடுவது மைலேஜ்ஜாக இருக்கும் என கணக்கு போட்டு தான் பொங்கலுக்கு மாற்றப்பட்டது.இயல்பாகவே, விஜய் படத்தில் அரசியல் வசனங்கள் இருக்கும் என்றாலும், ஜனநாயகன் படத்தில் சற்று தூக்கலாகவே இருக்கிறதாம். படத்தின் முதல் போஸ்டரே நான் ஆணையிட்டால் என எம்.ஜி.ஆர். சாட்டையை சுழற்றுவது போல விஜய்யும் சாட்டையை சுழற்றி நிற்கும் புகைப்படம் தான் வெளியானது. இதனாலேயே தேர்தலை ஒட்டி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது என்கிறார்கள்.அதோடு, விஜய்யின் கடைசி படம் என்பதாலும் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 35 ஆண்டுகளாக சினிமாவில் இருந்த விஜய், உச்சநட்சத்திரம் என்ற அந்தஸ்தில் சினிமாவை விட்டு விட்டு அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில், இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையை நினைவுபடுத்தும் வகையிலும் ஜனநாயகன் படத்தில் காட்சிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.இவையெல்லாம் விஜய் ரசிகர்கள் மனதுக்கு நெருக்கமாக எமோஷனல் கனெக்ட்டாக இருக்கும் என்பதாலும் படம் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது.இது ஒரு பக்கம் இருக்க, கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆன அடுத்த நாளே பராசக்தி வெளியாகிறது. 1950 மற்றும் அறுபதுகளில் திமுக நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டங்களை மையப்படுத்தி பராசக்தி படம் உருவாகியுள்ளது. காங்கிரஸை வீழ்த்தி திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வர காரணமாக இருந்தது இந்தி எதிர்ப்பு போராட்டம் தான். அப்போதைய காலக் கட்டத்தில் திமுக நடத்திய போராட்டங்களை கண் முன்னே காட்சிபடுத்தும் வகையில் தான், பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற நிலையில், தேர்தலை ஒட்டி பராசக்தி படத்தை வெளியிடுவது திமுகவுக்கு ஆதரவு அலையை வீச வைக்கும் என சொல்லப்படுகிறது. மக்களுக்காக இவ்வளவு போராட்டங்களை நடத்திய இயக்கம் திமுக என்பதை மக்கள் மத்தியில் நிலைநிறுத்த பராசக்தி படம் உதவும் என்பதும் கணக்காக உள்ளது.இதனால் தான், வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படம் குறித்த கண்காட்சி கூட அமைக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.அதுமட்டுமல்லாமல், பராசக்தி படம் சிவகார்த்திகேயனின் 25ஆவது படமாகும். தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் முன்னாடி போட்டி போட்டு ஜெயிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கையில் விஜய் துப்பாக்கியை ஒப்படைப்பது போன்ற காட்சி வந்தபோது, அடுத்த விஜய், சிவகார்த்திகேயன் தான் என பேசிக் கொள்ளப்பட்டது. தற்போது விஜய் படத்துடன் சிவகார்த்திகேயன் படம் மோத இருப்பது, விஜய் ரசிகர்களுக்கு சங்கடத்தை கொடுத்தாலும், பொங்கலுக்கு செம விருந்து காத்திருக்கிறது என்பது மட்டும் கன்ஃபார்ம்.