திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில், பாஜக மாநில ஊடகப் பிரிவு நிர்வாகி லிங்கேஸ்வரன் மாருதி மற்றும் அவரது அண்ணன் பாரதி கண்ணன் மீது நடந்த தாக்குதல் மற்றும் கடத்தல் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூலனூர் அருகே வளையக்காரன் வலசு பகுதியை நோக்கி, பாஜக கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்காக காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, குறுகிய சாலையில் திடீரென ஒரு கருப்பு நிற கார் குறுக்கே வந்து நின்றதாக கூறப்படுகிறது. காரின் நம்பர் பிளேட் டி.என்.14 – 9000 என இருந்ததுடன், அதனை மறைக்க கருப்பு துணி கட்டப்பட்டிருந்ததாகவும், காற்றில் அந்த துணி விலகியதால் நம்பர் தெளிவாக தெரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காரில் இருந்த ஆறு பேர், லுங்கி, வேட்டி, நீண்ட தாடி, நீண்ட முடி என பார்ப்பதற்கே பயங்கரமான ரவுடிகள் போல இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் விளக்கம் கேட்கச் சென்ற லிங்கேஸ்வரன் மாருதி மற்றும் பாரதி கண்ணனை, அந்த ஆறு பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் லிங்கேஸ்வரன் மாருதியின் கழுத்தை பிடித்து நெறித்ததுடன், கை, கால்களில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போனும் பறிக்கப்பட்டுள்ளது. “நாங்கள் போலீஸ், மேலிட உத்தரவு” என கூறிய அவர்கள், பாரதி கண்ணனை தரதரவென இழுத்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். மூலனூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறோம் என கூறிய நிலையில், அங்கு சென்ற லிங்கேஸ்வரன் மாருதியிடம், “யாரையும் நாங்கள் கைது செய்யவில்லை” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த லிங்கேஸ்வரன் மாருதி, தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கழுத்து மற்றும் கைகளில் கட்டுகள் போடப்பட்டு, குளுக்கோஸ் செலுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் சம்பவம் நடந்த இரண்டு நாட்கள் கடந்தும், போலீசார் முதல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என அவர் வேதனையுடன் குற்றம் சாட்டுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, பாரதி கண்ணன் மீது வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், 21ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கைது செய்தது போலீசாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து, திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. திமுக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இதை மேற்கொள்வதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் கூறுகையில், “கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் விற்பனை செய்தவர்கள் சுதந்திரமாக சுற்றும் தமிழகத்தில், எந்த குற்றமும் செய்யாத பாஜக நிர்வாகிகளை தாக்கி கடத்துவது காவல்துறையின் அதிகார அத்துமீறல். உடனடியாக முதல் அறிக்கை பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லையெனில், திங்கட்கிழமை அண்ணாசாலை முன்பு காவல்துறையை கண்டித்து பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என எச்சரித்துள்ளார்.இதையும் படியுங்கள் : ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ்