வங்கதேச வன்முறை வழக்கில், அந்நாட்டு முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து டாக்கா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 1400 பேர் கொத்து கொத்தாக பலியான வங்கதேச வன்முறையில் ஆயுதங்களை பயன்படுத்தி கொல்ல உத்தரவிட்டதாக எழுந்த புகாரில் ஷேக் ஹசீனாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருக்க, ஓராண்டாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வங்க தேசத்தில் நிகழ்ந்த சம்பவத்தை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடமுடியாது. சுதந்திர போராட்ட வீரர்கள் குடும்பத்தினர், வாரிசுகளுக்கு அரசு பணிகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்து மாணவர் அமைப்பினர் திரண்டு போராட்டம் நடத்தினர். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை அமைதியாக கையாளாத ஷேக் ஹசீனா அரசு, வன்முறையை கையிலெடுத்தது. இந்த வன்முறையில் சுமார் 1,400 பேர் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர். இது அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த ஆவாமி லீக் கட்சிக்கு பெரும் அவப்பெயரை கொடுத்தது. இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம், ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டமாக மாறியது. ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வங்கதேசத்தின் மூலை முடுக்கெல்லாம் வன்முறை பற்றி எரிந்தது.லட்சக்கணக்கான இளைஞர்கள் பிரதமர் மாளிகைக்குள் புகுந்து சூறையாடிய நிலையில், வங்கதேசமே போர்க்களம் போல ஆனது. இதனையடுத்து, ராணுவம் விதித்த கெடுவை அடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டே தப்பியோடிய ஷேக் ஹசீனா, ஓராண்டாக இந்தியாவில்தான் தஞ்சமடைந்து, வசித்து வருகிறார். இந்த நிலையில், ஷேக் ஹசீனா மீது கிரிமினல் குற்றங்களை சுமத்தி, அவரை விசாரிக்க முடியாத நிலையில், டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. சொந்த நாட்டு மக்களையே கொலை செய்ய உத்தரவிட்டதாக பதிவான வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என உறுதி செய்த தீர்ப்பாயம், உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை விதித்துள்ளது.வன்முறையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக ஷேக் ஹசீனா மற்றும் அப்போதைய அரசு அதிகாரிகள் மீது கொலை, கொலை முயற்சி, சித்ரவதை, மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டது என 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.ஷேக் ஹசீனா மற்றும் அவரது அரசின் உள்துறை அமைச்சராக இருந்த ஹான் கமல் மற்றும் அப்போதைய காவல்துறை தலைமை அதிகாரி சவுத்ரி அப்துலா ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதில் நீதிமன்றத்திலும், நாட்டு மக்கள் முன்பும் மன்னிப்பு கோரிய காவல்துறை தலைமை அதிகாரியை மன்னித்து விட்ட நீதிமன்றம், மற்ற இருவருக்கும் தண்டனை விதித்துள்ளது. மாணவர்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார் ஷேக் ஹசீனா என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட ஷேக் ஹசீனா, போராட்டக்காரர்களை கண்டுபிடிக்க டிரோன்கள், ஹெலிகாப்டர்களை பயன்படுத்தவும், கொடிய ஆயுதங்களை பயன்படுத்தி கொலை செய்யவும் உத்தரவிட்டது விசாரணையில் உறுதி செய்யப் பட்டுள்ளது எனவும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு வங்க தேசத்தில் தனது தலைமையிலான அரசு கவிழ்ந்ததில் இருந்து இந்தியாவில் தான் ஷேக் ஹசீனா தஞ்சமடைந்திருக்கிறார் என்ற நிலையில், இந்த தீர்ப்பை அடுத்து அவர் நாடு கடத்தப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே, ஷேக் ஹசீனாவை நாடு கடத்தவேண்டும் என தற்போதைய வங்கதேச அரசு கேட்டு வரும் நிலையில், இந்தியா அதற்கு பதிலளிக்காமல் இருந்து வருகிறது.1996ஆம் ஆண்டு முதன்முறையாக பிரதமர் ஆன ஷேக் ஹசீனா, சுமார் 15 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருந்தார். 2009ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஷேக் ஹசீனா ஆட்சி கட்டிலில் இருந்தார். கடந்த ஜனவரி மாதம் நான்காவது முறையாக தொடர்ந்து ஆட்சியைப் பிடித்தார். வங்க தேசத்தின் பிரதான எதிர்க்கட்சியே தேர்தலில் போட்டியிடாத நிலையில், எளிதாக பிரதமர் நாற்காலியை தக்க வைத்தார் ஷேக் ஹசீனா. ஷேக் ஹசீனா, வங்கதேச அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். ஆனால், தனது அதிகார, அராஜக மமதை காரணமாக நாட்டை விட்டு தப்பியோடும் நிலை ஏற்பட்டதோடு, தற்போது மரண தண்டனையை எதிர் கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது.