"படையப்பா" திரைப்படத்தில் நீலாம்பரி கேரக்டரின் காதல்தான் காவியக்காதல், அதனால் நீலாம்பரிக்கு நீதி கிடைக்க வேண்டும் என 2k கிட்ஸ் மற்றும் ஜென்ஸி கிட்ஸ் சமூகவலைதளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு படையப்பா ரிலீஸ் ஆனபோது, ரஜினி ரசிகர்களுக்கு பயந்து சென்னையைவிட்டே சிலநாட்கள் தலைமறைவாக இருந்த ரம்யா கிருஷ்ணன், தற்போது நீலாம்பரிக்கு நீதி கேட்கும் 2k கிட்ஸ் மற்றும் ஜென்ஸி கிட்ஸ்களால் சற்று ஆறுதலடைந்துள்ளாராம்."மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி" என்பதுபோல் இந்த ஜென்மத்தில் மணந்தால் ஆறுபடையப்பா இல்லாவிட்டால் ஆறடி நிலமே போதும் என வைராக்கியமாக, துப்பாக்கி குண்டுகளால் தன் வயிற்றை துளைத்து உயிரைவிட்ட நீலாம்பரியின் காதல் தான் உண்மையான காதல், அவருக்கு நீதி வேண்டும் என்பதே, ரீ-ரிலிஸ் படையப்பா படத்தை பார்த்த 2k கிட்ஸ் மற்றும் ஜென்ஸி கிட்ஸ்களின் ஆதங்கம்.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியானது படையப்பா திரைப்படம். இதில்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன், செளந்தர்யா, மணிவண்ணன், ராதா ரவி, ரமேஷ் கண்ணா, நாசர், செந்தில் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்தனைபேர் நடித்திருந்தாலும் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கேரக்டர்தான் படத்தின் ஆணிவேரே.அந்த கேரக்டர் மட்டும் இல்லையென்றால், படையப்பா படை இல்லாத அப்பாவாக தான் இருந்திருந்திருக்கும். என் வழி தனிவழி... அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது... ஒரு தடவை நீ ஜெயிச்சிட்ட நல்லதா போச்சு நான் முழிச்சிட்டேன் என ரஜினிக்கு தான் மாஸ் டயலாக்குள் என்றால், இந்த நீலாம்பரி எதுக்கும் அவ்ளோ சீக்கிரம் ஆசைப்படமாட்டா அப்படி ஆசைப்பட்டா அத அடையாம விடமாட்டா, மின்சாரக்கண்ணா எல்லாருக்கும் ஏன் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு தெரியுமா? வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னவிட்டு போகல என ரம்யா கிருஷ்ணனுக்கும், மிரட்டல் டயலாக் தான் படம் முழுக்க இருந்தது. நீலாம்பரி கேரக்டரில் நடிக்காமல், கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரஜினிக்கு டஃப் கொடுத்திருப்பார் ரம்யா கிருஷ்ணன். வில்லி என்றால் அக்மார்க் வில்லி ரம்யா கிருஷ்ணன் தான் என படம் பார்த்து மெச்சிக் கொள்ளாதவர்களே இருக்க முடியாது. இதுஒருபுறம் இருந்தாலும், ரஜினியின் வெறித்தனமாக ரசிகர்கள் பலர், தியேட்டர் ஸ்கிரீனில் காலணியை வீசி, கொந்தளித்ததாக ரம்யா கிருஷ்ணனே பேட்டிகளில் கூறியதுண்டு.இவ்வளவு ஏன் படம் வெளியானபோது ரஜினி ரசிகர்களுக்கு பயந்து ரம்யா கிருஷ்ணன் சென்னையிலேயே இல்லையாம். அந்த அளவுக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது நீலாம்பரி கேரக்டர். அந்த கொந்தளிப்பு மறையவே சில ஆண்டுகள் ஆகியது.இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்தின் 75ஆவது பிறந்தநாளையொட்டி படையப்பா ரீ ரிலீஸ் ஆனது.அதனை ரீ ரிலிஸ் என்று சொல்வதைவிட நியூ ரிலீஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.. 80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ், 2k கிட்ஸ்களோடு சேர்ந்து ஜென்ஸி கிட்ஸ்களும் கொண்டாடி வருகின்றனர். படையப்பா படம் ரிலீஸ் ஆன நேரத்தில் தான் ஜென்ஸி கிட்ஸ்கள் பிறந்திருக்கவே செய்வார்கள்.இருப்பினும், நியூ ரிலீஸில் அப்போதைய ரசிகர்கள் கொண்டாடியதைவிட ரீ ரிலீஸை ஜென்ஸி கிட்ஸ் கொண்டாடி வருகின்றனர். ஆனால், இதில் சிறு வித்தியாசம் உள்ளது. அப்போதைய ரசிகர்கள் நீலாம்பரி கேரக்டரை திட்டி தீர்த்தார்கள்.இப்போதைய 2k கிட்ஸ், ஜென்ஸி கிட்ஸ்களும் நீலாம்பரியின் காதல் காவியக்காதல், இந்த ஜென்மத்தில் ஆறு படையப்பாவை திருமணம் செய்ய முடியாவிட்டாலும் அடுத்த ஜென்மத்திலாவது நினைத்ததை அடைவேன் என கடைசிவரை உறுதியாக நின்று உயிரை விட்டுள்ளார். அதனால் நீலாம்பரிக்கு நீதி வேண்டும் #justicefornilambari என சமூகவலைதளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் வெளியான ஆண் பாவம் பொல்லாதது, லவ்வர், லவ் டுடே, டான் உள்ளிட்ட திரைப்படங்கள் பலரின் வாழ்க்கையோடு ஒத்துப்போவதுபோல் இருந்ததால் அது மிகப்பெரிய ஹிட் ஆனது.அதேபோல்தான் படையப்பா படத்தில் நீலாம்பரியின் காதலும் தங்கள் காதல் சூத்திரத்தோடு ஒத்துப்போவதாகவும், அதனால் அவருக்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும் என, படம் ரீ ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே 2k கிட்ஸ்களும், ஜென்ஸி கிட்ஸ்களும் வாய்வலிக்க கூறி வருகின்றனர்.இவர்களது இந்த ஆதரவை பார்த்து நீலாம்பரி கேரக்டரான ரம்யா கிருஷ்ணனுக்கே சந்தோஷ ஷாக்தான். காரணம், படம் ரிலீஸ் ஆனபோது தியேட்டர் ஸ்கீரீனில் காலணி பறந்தது, ஏதோ கிரைம் குற்றவாளி போன்று சென்னையைவிட்டே சிலநாட்கள் தலைமறைவானார்.ஆனால், தற்போது 2k கிட்ஸ், ஜென்ஸி கிட்ஸ்களும் நீலாம்பரி கேரக்டருக்கு கொடுக்கும் ஆதரவு ரம்யா கிருஷ்ணனையே புல்லரிக்க வைத்துள்ளதாம். வாத்தியார் படத்தில், "இவ்ளோ நாள் எங்கடா இருந்தீங்க" காமெடி காட்சியில் வடிவேலு ஆறுதல்பட்டுக் கொள்வதுபோல, ரம்யா கிருஷ்ணனும் 2k கிட்ஸ் மற்றும் ஜென்ஸி கிட்ஸ் கொடுக்கும் ஆதரவை பார்த்து தன்னை தேற்றிக் கொள்கிறாராம். எது எப்படியோ 25 ஆண்டுகளுக்குப் பிறகாவது நீலாம்பரியின் காதலின் ஆழம் புரிந்ததே என்பது படக்குழுவினருக்குமே ஆனந்தம் தான்...