தமிழகத்தில், இரண்டு நாட்களில் மட்டும் 4 இடங்களில் அரசு பேருந்துகள் விபத்தில் சிக்கியிருப்பது, பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிய, மறுநாள் மதுரையில் பேருந்தின் பின்பக்க டயர்கள் கழன்று ஓடிய சம்பவங்களை பார்த்து பதறி போன மக்கள், பேருந்துகளை முறையாக பராமரிக்காமல் தங்களின் உயிருடன் அரசு விளையாடுவதாக குற்றஞ்சாட்டி உள்ளனர்.2 நாளில் விபத்தில் சிக்கிய 4 அரசுப்பேருந்துகள்சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கும் தமிழகத்தில், இன்றைய முக்கிய அரசியல் விவாதமாக மாறியிருப்பது போக்குவரத்து துறை தான். ஆண்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற வாக்குறுதியை அதிமுக அறிவித்த நாள் முதலே, அது எப்படி சாத்தியம் என கேள்வி எழுந்தாலும், முதலாவது மோசமான தரத்தில் உள்ள அரசு பேருந்துகளை சீர் செய்ய வேண்டும் என்றே அதிகளவு கோரிக்கை எழ தொடங்கின. குறிப்பாக, மக்கள் அதிகளவு பயணம் மேற்கொண்ட கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 4 அரசு பேருந்துகள் விபத்தில் சிக்கியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.சாத்தூர், மதுரையில் என்ன நடந்தது?பொங்கல் விடுமுறை முடிந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து, சாத்தூர் அருகே திடீரென தீப்பற்றி எரிந்தது. ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கியதால் அன்றைய தினம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லாவிட்டால் 76 பயணிகளின் நிலையை யோசிக்கும் போதே மனம் பதறுகிறது.பொங்கல் பண்டிகை காரணமாக, இடைவெளியின்றி பேருந்தை இயக்கிக் கொண்டு இருந்ததே தீப்பிடிக்க காரணம் என சொல்லப்பட்டது, பகீர் கிளப்புகிறது. இதேபோல், மதுரையில் இருந்து பழனிக்கு சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயர்கள் கழன்று ஓடிய பகீர் சம்பவமும் நடந்துள்ளது.திகில் ஏற்படுத்திய திண்டுக்கல்இதுமட்டுமின்றி, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது, திண்டிவனம் கூட்டேரிப்பட்டில் பிரேக் பிடிக்காததால் சாலையோரம் இருந்த கடைகள் மீது அரசு பேருந்து மோதியது என, நாளுக்கு நாள் அரசு பேருந்துகள் மீதான மக்களின் அச்சம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.பாதுகாப்பான பயணத்தை வழங்க வேண்டும்பொதுவாக, போக்குவரத்து வாகனங்களை பொருத்தவரை 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அதில் அரசு கவனம் செலுத்துவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா ? வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளதா என்று ஆய்வு செய்யும் அரசு அதிகாரிகள், அன்றாடம் பொதுமக்களை ஏற்றி செல்லும் அரசு பேருந்துகளில் ஏன் எந்த ஆய்வையும் மேற்கொள்வதில்லை? என கேள்வி எழுப்பும் பயணிகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களின் உயிருக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாத சூழல் நிலவுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கு உடனடி நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த பேருந்துகளை சீர் செய்து மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.இதையும் பாருங்கள் - சொத்துத் தகராறில் விபரீதம்