சென்னையில், தாய் கிழவி படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தாம் யாரோடும் போட்டி போடவோ, காலி செய்யவோ வரவில்லை என உருக்கமாக விளக்கம் அளித்திருப்பது கவனிக்க வைத்துள்ளது. ஏற்கனவே, தனுஷுடன் பஞ்சாயத்து, ஜனநாயகன் படத்துடன் பராசக்தி படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்ததில் இருந்து விஜய் உடன் பஞ்சாயத்து என சிவகார்த்திகேயனை சுற்றி சர்ச்சைகள் வலம் வந்த வண்ணம் இருந்த நிலையில், சிவகார்த்திகேயனின் பேச்சு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தடைகளை தாண்டி வர தயார்சாதாரண தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து சமீப காலமாக சர்ச்சைகள் வெடித்துக் கொண்டே இருக்கின்றன. தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு சிவகார்த்திகேயன் அவ்வப்போது பதிலளித்து வந்தாலும், சர்ச்சை மட்டும் ஓய்ந்த பாடில்லை. இந்த நிலையில், எஸ்.கே. தயாரிப்பில் உருவான தாய் கிழவி படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், நான் யாருக்கும் போட்டியாகவோ, தாண்டிப் போகவோ எதிர்க்கவோ நினைக்கவில்லை எனவும், தனக்கு கிடைத்த வாய்ப்பை மட்டும் தான் பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறியுள்ளார். அதோடு, மக்கள் எப்போதுமே தனக்கு ஆதரவாக இருந்திருப்பதாக கூறிய சிவகார்த்திகேயன், திரையுலகில் இருப்பவர்கள் தான் பல தடைகளை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் எனவும், அந்த தடைகளை தாண்டி வர தயார் எனவும் தெரிவித்துள்ளார்.மேடையிலேயே சிவகார்த்திகேயன் கண்கலங்கினார்சிவகார்த்திகேயனின் இந்த பேச்சு, அவர் குறித்து பரவும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயனுக்கு, தனுஷ் தயாரித்த எதிர் நீச்சல் படம் தான் ஹிட் படமாக அமைந்தது. அந்த வகையில், சிவகார்த்திகேயனை ஏற்றி விட்ட ஏணி தனுஷ் தான் என கோடம்பாக்கத்தில் பலரும் பேசிக் கொள்வதுண்டு. ஆனால், சில ஆண்டுகளிலேயே சிவகார்த்திகேயன் - தனுஷ் உறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் பேசிக் கொள்வதை கூட தவிர்க்க, தனது வளர்ச்சிக்கு உதவியாக இருந்த தனுஷையே சிவகார்த்திகேயன் மறந்து விட்டார். நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என விமர்சனங்கள் எழுந்தது. அந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் குறித்து ஏகப்பட்ட அவதூறுகளும் பரப்பப்பட்டன. இதற்கெல்லாம் காரணம் தனுஷ் தரப்பு தான் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆத்திரப்பட்டனர். ஒரு முறை மேடையிலேயே சிவகார்த்திகேயன் கண்கலங்கினார்.தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுடன் மோதல்இது ஒரு பக்கம் இருக்க, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுடனும் சிவகார்த்திகேயனுக்கு மோதல் போக்கு எழுந்தது. 2019ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தின் தனக்கு பேசப்பட்ட சம்பளத்தை கொடுக்கவில்லை என ஞானவேல்ராஜாவுக்கு எதிராக சிவகார்த்திகேயன் வழக்கு தொடுக்க, இருவரது விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. அதற்கு பிறகு பல மேடைகளில்ஞானவேல்ராஜா மறைமுகமாக சிவகார்த்திகேயனை திட்டி ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிகழ்வுகளும் அரங்கேறின.விஜய்யின் இடத்தை குறி வைக்கிறாரா?இவையெல்லாவற்றையும் தாண்டி, சமீபத்தில் வெளியான பராசக்தி படம் கூட எவ்வளவு பஞ்சாயத்தில் சிக்கியது என யாரும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் போட்டிக்கு போட்டியாக பொங்கல் பண்டிகைக்கு பராசக்தி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்க, சிவ கார்த்திகேயனுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் பொங்கி எழுந்தனர். கோட் படத்தில் தனக்கு பிறகு சிவகார்த்திகேயன் என கூறும் வகையில், சிவகார்த்திகேயன் கையில் விஜய் துப்பாக்கியை கொடுப்பது போல காட்சி வரும் என்ற நிலையில், அந்த காட்சியை குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு எதிராக விமர்சனங்களை வீச தொடங்கினர். விஜய்யின் இடத்தை குறி வைக்கிறாரா? சிவகார்த்திகேயன் என பேசப்படவே, கடைசியில் இசை வெளியீட்டு விழாவில் யார் என்ன சொன்னாலும் இது அண்ணன் - தம்பி பொங்கல் என பேசி சாந்தப்படுத்தினார். ஆனாலும், பராசக்தி படத்திற்கு எதிராக விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பினர்.இந்த விளக்கமாவது முற்றுப் புள்ளி வைக்குமா?இந்த நிலையில் தான், தாய் கிழவி பட விழாவில் சிவகார்த்திகேயன் பேசியிருப்பது கவனிக்க வைத்துள்ளது. சினிமாவில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்திக் கொள்வதாக அழுத்தம் திருத்தமாக கூறியுள்ள சிவகார்த்திகேயன், மற்றவர்கள் தான் தடைகளை ஏற்படுத்துவதாக கூறியிருக்கிறார். வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல கோலிவுட்டில் அவ்வப்போது சிவகார்த்திகேயனை வைத்து கிளம்பும் சர்ச்சைக்கு இந்த விளக்கமாவது முற்றுப் புள்ளி வைக்குமா? என்பது போக போக தான் தெரியும். Related Link "தாய் கிழவி" படத்தின் "மாட்டிகிட்டான் மைனர்" வீடியோ பாடல்