இம்மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியான நிலையில், திமுக, அதிமுக கூடாரங்களில் பரபரப்பு மேலோங்கியுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நிலவி வரும் சலசலப்புகளுக்கு மத்தியில், ராகுலின் விசிட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் நிலையில், மோடியின் வருகையும் தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்யும் கணக்கில் தான் திட்டமிட்டு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருந்தாலும், கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையும் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன.இந்த நிலையில், புதிய அப்டேட்டாக இம்மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 28 அல்லது 29 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் தமிழகம் வரும் பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் தாமரை மகளிர் மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி தமிழகம் வரும் அதே நாளில் ராகுல் காந்தியும் தமிழகம் வர திட்டமிட்டு இருப்பதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இரு தேசிய தலைவர்களும் ஒரே நாளில் தமிழகம் நோக்கி வர இருப்பது கவனிக்க வைத்துள்ளது.பிரதமர் மோடி வருகை தரும் நாள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முக்கியமான நாளாக இருக்கும் என கருதப்படுகிறது. அதிமுக கூட்டணியில் தற்போதைக்கு பாஜகவும், பாமகவும் இணைந்திருக்கின்றன. பாமகவுக்கு 18 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்க அதிமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், பாஜகவுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் வகையில் EPS டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த நிலையில், பிரதமர் வருகைக்குள்ளாக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை இறுதி செய்து தொகுதி பங்கீட்டை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். அதற்கு ஏற்ப, தேமுதிகவுடன் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்னொரு பக்கம் TTV, OPS ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறதாம் பாஜக. பிரதமர் மோடி வருகையின் போது கூட்டணி கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி திமுகவுக்கு எதிரான வலுவான கூட்டணி என்பதை காட்ட திட்டமிட்டு இருக்கிறார்களாம். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸின் கூட்டணி நிலைப்பாடு விவாதத்திற்குள்ளாகி வருகிறது. திமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ், வருகிற தேர்தலுக்கு த.வெ.க. பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாக பேசிக் கொள்ளப்பட்டது. அதோடு, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என காங்கிரஸின் சில நிர்வாகிகள் கேட்டு வரும் நிலையில், அதுவும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.சமீபத்தில் அதிகாரத்தில் பங்கு கேட்க நேரம் வந்து விட்டது என பதிவு போட்ட காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூரை, இந்துத்துவாவின் குரல் என திமுகவினர் சிலர் விமர்சித்தது வார்த்தை மோதலுக்கு வழிவகுத்தது. திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கிரிஷ் ஜோடங்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டாலும் கூட, காங்கிரஸ் யாருடன் கை கோர்க்கும் என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்பட்டு வந்தது.அதோடு, ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தியும் விஜய்யை சந்தித்தது, யூகங்களை மேலும் வலுப்படுத்தியது. போதாக்குறைக்கு, தமிழகத்தின் கடன் சுமையை உத்தரபிரதேசத்தின் கடன் சுமையுடன் ஒப்பிட்டு பிரவீன் சக்கரவர்த்தி பேசியதும் திமுகவினருக்கு கோபத்தை தூண்டிய நிலையில், இரு தரப்புக்கும் சுமூக உறவு இல்லாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் தான் ராகுல் காந்தியின் வருகை அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ராகுல் வருகை மூலம் காங்கிரஸின் கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக எழும் கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல, தை மாதத்தை குறி வைத்து கூட்டணி கணக்குகளை இறுதி செய்ய, தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய திமுகவும், அதிமுகவும் தீவிரம் காட்டி வருகிறது.