தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக இருந்ததால், பெரும்பாலான மாவட்டங்களில் குடியிருப்புகள் மற்றும் வயல்களை வெள்ளம் சூழ்ந்தது. மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் கண்ணீர் வடித்தனர்.நாகை மாவட்டத்தில், பெய்த தொடர் கனமழையால் சுமார் 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. சுமார் 1 லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் பயரிடப்பட்டு 60 நாட்களே ஆன நிலையில், அனைத்தும் நீரில் மூழ்கின. கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து, உபரி நீர் திறக்கப்பட்டு தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக, மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியார் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, பாபநாசம் கோயில் படித்துறை முன்பு உள்ள தாமிரபரணி ஆற்றில், பக்தர்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காரையார், சேர்வலாறு அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடந்த இரு நாட்களாக பெய்த மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதனால் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க, தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் லால்புரம் கிராமத்தில் உள்ள வீடுகளை சுற்றிலும் மழை வெள்ளம் தேங்கியது. இதனால், ஊராட்சி நிர்வாகத்தினர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாலையை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழை காரணமாக, பெரும்பாலான இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தை மழை வெள்ளம் சூழ்ந்ததால் அரசு ஊழியர்கள் அவதி அடைந்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால், மதினா நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி அடைந்தனர். ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும் போதும், இதேபோல் வெள்ளம் ஏற்பட்டு, வீட்டிற்குள் முடங்கும் நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் காட்டாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும் மலைப்பகுதியில் வெள்ளத்தை கடக்கும் மக்கள், கயிறு கட்டி ஆபத்தான முறையில் பயணிக்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி போக்குவரத்துக் கழகத்தில் அமைந்துள்ள கேண்டீனை மழை வெள்ளம் சூழ்ந்ததால், போக்குவரத்து ஊழியர்கள் அவதி அடைந்தனர். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.