வங்கிகளில் கேட்பாரற்று ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான பணம் கிடப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வங்கி நடைமுறை திருத்த மசோதாவில் அதற்காக சில சட்ட திருத்தங்கள் இடம் பெற்றுள்ளன. அதன் படி வங்கி வாடிக்கையாளர்கள் நான்கு பேரை தமது நாமினிகளாக நியமித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் காலம் சென்று விட்டால் நாமினிகள் சதவிகித அடிப்படையில் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். கேட்பாரற்று கிடக்கும் வங்கி கணக்குகளுக்கு தனித்துவமான எண்ணை உருவாக்கி, அந்த தொகை தவறாக பயன்படுத்தப்படுவதை வங்கிகள் தடுக்கவும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. கேட்பாரற்று கிடக்கும் வங்கித் தொகை குறித்து முறையான விண்ணப்பங்கள் வந்தால் 3 நாட்களுக்குள் அதன் மீது முடிவெடுக்கவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றையும் மீறி தேங்கும் பணத்தை கார்ப்பரேட் அமைச்சகத்திற்கு மாற்றி முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் எனவும் வங்கி திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.