ஈரானில் ரத்த மழை பொழிகிறதா, இல்லையெனில் ரத்த ஆறு ஓடுகிறதா? கொஞ்சம் பயத்துடனும், ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கும் மக்கள்... அப்படி என்ன நடக்கிறது ஈரானில், வாங்க தெரிந்து கொள்வோம்...சோவென கொட்டும் மழை, செந்நிற மண் கரைந்து ரத்தம் போல் ஓடி கடலில் கலக்கும் தண்ணீர்.. சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும் கடற்கரை என காண்பவர்களை ஒரு கணம் வாயை பிளக்க வைக்கும் அளவிற்கு வியப்பை ஏற்படுத்தினாலும் ,இதற்கு பின்னால் உள்ள அறிவியல் தான் என்ன? இந்த அற்புத நிகழ்வு உலக புகழ்பெற்ற ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ரெயின்போ தீவில் உள்ள கடற்கரையில் தான் நிகழ்கிறது. இந்த கடற்கரை பகுதி இயற்கையாகவே அதிக அளவில் இரும்பு, ஆக்சைடு மற்றும் பிற தாதுக்களைக் கொண்ட சிவப்பு மண்ணை கொண்ட பகுதியாக உள்ளது. இதனால் தான் அப்பகுதியில் மழை பொழிவு ஏற்பட்டால் மழைநீர், கடற்கரை மண்ணில் உள்ள இரும்பு தாதுக்களுடன் சேர்ந்து பிரகாசமான சிவப்பு நிறத்தை உண்டாக்கி ஆறு போல் ஓடி கடலில் கலக்கிறது. மர்மமான "இரத்த மழை"க்குப் பிறகு ஈரான் கடற்கரை பிரகாசமான சிவப்பு நிறமாக மாறுகிறது என சுற்றுலா வழிகாட்டி ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவை கண்ட பலர், இது யாரோ ஒரு பெரிய வாளியில் சிவப்பு நிற பெயின்டை கொண்டு வந்து கடலில் கொட்டு வது போல் உள்ளது என்றும் இது "கடவுளுக்கு மகிமை. என்ன ஒரு அழகு. உண்மையில், கடவுள் இரு உலகங்களுக்கும் சிறந்த ஓவியர், எனவும் வர்ணித்து வருகின்றனர்.