news-tamil-logo

3/16/2026, 3:39:22 PM

news-tamil-logo
more
Home news நெருங்கிய DEADLINE, சோனியா பளீச் முடிவு
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

நெருங்கிய DEADLINE, சோனியா பளீச் முடிவு

சிதம்பரம் சீக்ரெட் ''கை'' கொடுத்தது

Posted on: Mar 04, 2026 09:02 AM

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சீட் இறுதி செய்யப்படாதது தமிழ்நாட்டு அரசியல் களத்தை பரபரப்பிற்குக் கொண்டு சென்று உள்ளது. திமுக உடனான கூட்டணியை தக்க வைக்க இறுதிக் கட்டமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முதலமைச்சரை சந்தித்திருக்கும் நிலையில், எப்போது வேண்டுமானாலும் இறுதி அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆண்டு கால கூட்டணியில் விரிசல் வந்தது ஏன்? விரிசலுக்கு காரணம் யார்? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

காங்கிரஸ் கோரிக்கை, திமுக கறார்
20 ஆண்டுகளுக்கு மேலாக நெருக்கமாக இருந்த திமுக - காங்கிரஸ் உறவில் இப்படி ஒரு விரிசல் வரும் என அரசியல் தெரிந்த யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் தான்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்க, தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை திமுக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கூட்டணியின் முதல் பங்காளி கட்சியான காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல் சிக்கல் எழுந்திருப்பது, கூட்டணி முறிவை நோக்கி நகருகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அண்மைக் காலமாகவே ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை காங்கிரஸ் முன் வைத்து வந்தது. ஆனால், ஆட்சியில் பங்கு ஒத்து வராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறி விட, கூடுதல் தொகுதிகள் என்பதை நோக்கி காங்கிரஸ் நகர்ந்தது. அந்த வகையில், அறிவாலயத்தில் தொகுதி பங்கீட்டு குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் 41 தொகுதிகளும், 2 ராஜ்ய சபா சீட்டும் கோரியது. ஆனால், புதிதாக தேமுதிக, மநீம கட்சிகள் இணைந்ததை சுட்டிக்காட்டி முதலில் 21 தொகுதிகள் தான் முடியும் என திமுக கறார் காட்டியது. பின்னர், 25 தொகுதிகள் கொடுக்க திமுக முன் வந்த நிலையில், திமுக கொடுக்கும் 25 தொகுதிகள் போதாது என இடையில் குண்டை தூக்கி போட்டார் காங்கிரஸின் கிரிஷ் சோடங்கர்.

சோனியா வெர்சஸ் ராகுல்
முதல் நாள் பேச்சுவார்த்தையில் 3ஆம் தேதி மாலைக்குள் இறுதி முடிவை தெரிவிக்க காங்கிரஸ் கட்சிக்கு திமுக கெடு விதித்ததாக தகவல் வெளியான நிலையில், காலையிலேயே டெல்லியில் காங்கிரஸ் முகாமில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ராகுல் காந்தி, சோனியா காந்தி, கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் அவசர மீட்டிங் போட, சென்னையில் இருந்தவாறு வீடியோ கான்ஃபரன்சில் செல்வபெருந்தகையும் பங்கேற்றார். அந்த மீட்டிங்கில் பேசிய சோனியா காந்தி, தொகுதி எண்ணிக்கையை காரணம் காட்டி நம்பகமான கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. சோனியா முடிவுக்கு ராகுல் கடைசி வரைக்கும் இசைவு தெரிவிக்காத சூழலில், திமுக கூட்டணி வேண்டுமா? வேண்டாமா? சோனியா வெர்சஸ் ராகுல் என நீண்ட பட்டிமன்றமே நடந்திருக்கிறது.

அதிகாரம் கார்கேவிடம்...
கூடுதல் தொகுதிகளை ஒதுக்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறி விடலாம் என்று, ராகுல் காந்தி உறுதியாக நிற்க, சோனியாவின் தலையீட்டால் பேச்சுவார்த்தை வேறு கோணத்தை நோக்கி சென்றிருக்கிறது. திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள சோனியா காந்தி விரும்பாத சூழலில், கடைசியில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது என்கிறார்கள்.

திமுக முடிவு என்ன?

இந்த நிலையில் தான், டெல்லி மீட்டிங் குறித்த பரபரப்பு ஓயும் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. டெல்லியில் என்னென்ன பேசப்பட்டது என்ற தகவலை ப.சிதம்பரம் மூலம் சோனியா காந்தி சொல்லி அனுப்ப, செல்வப்பெருந்தகையுடன் சித்தரஞ்சன் சாலையில் முதலமைச்சர் இல்லத்திற்கு வந்தார் ப.சிதம்பரம். பழுத்த அரசியல் வாதியான ப.சிதம்பரம் நடத்திய இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் 31 இடங்கள் என்ற அளவுக்கு இறங்கி வந்திருப்பதாக கூறப்படுகிறது. 31 சட்டமன்ற தொகுதிகள் 2 ராஜ்ய சபா சீட்டு என சிதம்பரம் பேசியதற்கு, திமுக தரப்பில் பெரிய அளவில் எதிர்ப்புக் கொடி வரவில்லை என்கிறார்கள். 2026ல் ஒரு ராஜ்ய சபா சீட்டும், 2028ல் ஒரு ராஜ்ய சபா சீட்டும் பெற்றுக் கொள்ள காங்கிரஸ் முடிவு செய்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கோரிய 31 தொகுதியில் இருந்து ஒன்றிரண்டு தொகுதிகளை குறைத்துக்கொண்டு 28 பிளஸ் 2 என்ற கணக்கில் முடித்துக் கொள்ள திமுக முடிவு செய்திருக்கிறதாம்.

எந்த இழுபறியும் இல்லை
2011 சட்டமன்ற தேர்தலில், 63 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 2016 தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டது. 2021 தேர்தலில் 25 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல, 2024 மக்களவை தேர்தலில் புதுச்சேரியுடன் சேர்த்து 10 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கியது திமுக. இந்த நிலையில் தான், 2026 தேர்தலில் 28 சட்டமன்ற தொகுதிகள் 2 ராஜ்ய சபா இடங்கள் கொடுக்க திமுக முடிவு செய்திருக்கிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
முதலமைச்சர் வீட்டில் நடந்த ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது என்றார். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்ற செல்வப்பெருந்தகை, எந்த இழுபறியும் இல்லை என்றார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
ஆரம்பத்தில் இருந்தே கூடுதல் தொகுதிகளை கொடுக்கா விட்டால் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியில் இணைந்து விடுவோம் என காங்கிரஸ் பேசியது, திமுகவை ஆத்திரப்பட வைத்தது. இதனாலேயே இரு தரப்புக்கும் மோதலும், முட்டலும் உச்சத்தை எட்டியது. 2006 தேர்தலில் மைனாரிட்டி திமுக ஆட்சிக்கு ஆதரவு கொடுத்ததை சுட்டிக்காட்டி காங்கிரஸும், 2024 தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக தான் முதன்முதலில் முன்மொழிந்ததை குறிப்பிட்டு திமுகவும் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில் தான் ப.சிதம்பரத்தின் சந்திப்பு கூட்டணி உறவை சுமூகமாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவிலேயே திமுக - காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Related Link
திமுக, அதிமுக ரகசிய டீலிங் - விஜய் பேச்சு

திமுக, அதிமுக ரகசிய டீலிங் - விஜய் பேச்சு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.64 கோடிக்கு மேல் வசூலித்த தாய் கிழவி திரைப்படம்

0
3 mins agoshare
Thaai kizhavi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved