பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, தொகுப்பூதிய செவிலியர்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் தெரிவித்தனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மாநிலத்தின் பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், கடந்த வியாழனன்று சென்னை சிவானந்தா சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் தங்களது போராட்டத்தை அங்கேயே தொடர்ந்தனர். போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து செல்ல மறுத்த செவிலியர்கள், பேருந்துகளில் ஏற்றி கிளாம்பாக்கத்தில் இறக்கி விடப்பட்டனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்ட செவிலியர்கள், தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை போராடுவோம் எனக்கூறி, அங்கும் தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், ஊரப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.இதற்கிடையில், சென்னைக்கு சென்று போராட்டத்தில் பங்குபெற முடியாத செவிலியர்கள், அந்தந்த மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன், தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், கோரிக்கை எதுவும் ஏற்கப்படாததால், தங்களது போராட்டத்தை தொடர்வதாக செவிலியர்கள் தெரிவித்தனர். ஊரப்பாக்கம் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த செவிலியர்கள், செல்போன் டார்ச் லைட்டை ஒளிர விட்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களில் ஒருபகுதியினர் ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஊர்களுக்கு செல்ல மறுத்த செவிலியர்களில் மற்றொரு பகுதியினர், மண்டபத்திற்கு வெளியே இரவு முழுவதும் காத்திருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமா? என அமைச்சர் கேள்வி கேட்பதாகவும், மிரட்டும் தொனியில் அவர் பேசியதாகவும் செவிலியர்கள் குற்றம் சாட்டினர்.எம்.ஆர்.பி. மூலம் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், லேப் டெக்னீசியன்கள் உள்ளிட்டோர் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்படும் போது, செவிலியர்களை மட்டும் பணியமர்த்தாதது ஏன்? என்று செவிலியர்கள் கேள்வி எழுப்பினர். எம்.ஆர்.பி. தேர்வு நடத்தி 10 வருடமாகி விட்டதாகவும், புதிதாக 11 மருத்துவமனை திறக்கப்பட்டும், அங்கு செவிலியர்களுக்கான காலி பணியிடங்களை காட்டாதது ஏன்? என வினா எழுப்பியவர்கள், ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, செவிலியர்கள் பணியிடங்கள் உயர்த்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.