ஓமன் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான Order of Oman விருதினை சுல்தான் ஹைதம் பின் தாரீக் வழங்கி கவுரவித்தார். இருநாட்டு உறவை வலுப்படுத்த பிரதமர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக விருது வழங்கப்பட்டது. இது வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 29ஆவது உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அல் பராக்கா(Al Baraka) அரண்மனைக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரீக் ஆரத்தழுவி வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை பிரதமருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.மஸ்கட்டில் இந்தியா - ஓமன் நாடுகளின் வர்த்தக கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, உலகின் மூன்றாவது பொருளாதார வளமிக்க நாடாக வளரும் இந்தியாவோடு கரம் கோர்த்து ஓமனும் நடை போடுவதாக மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியா எப்போதும் முற்போக்கு சிந்தனை கொண்ட நாடு என்றும், அது வளரும் போதெல்லாம் நட்பு நாடுகளை வளர வைக்கும் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.