இத்தனை ஆண்டுகளாக, விஜய்க்கு வலது கரம், இடது கரமாக கூடவே இருந்த புஸ்ஸி ஆனந்தை ஓரங்கட்டி, புதிதாக கட்சிக்கு வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க.வின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை செங்கோட்டையன் தான் வழி நடத்துவார் என சொல்லப்படும் நிலையில், படிப்படியாக புஸ்ஸி ஆனந்துக்கான அதிகாரம் குறையும் பின்னணி குறித்து, விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு வந்தது யாருக்கு கலக்கத்தை கொடுத்ததோ இல்லையோ? புஸ்ஸி ஆனந்த் தலைக்கு தான் கத்தியாக மாறி, தொங்கி கொண்டிருக்கிறது என்கிறது பனையூர் வட்டாரம்.கடந்த வியாழக்கிழமை, த.வெ.க.வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூர் அலுவலகத்தில் நடைபெற்றது. முதலில், கூட்டத்தில் விஜய் பங்கேற்பதாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடந்த விஷயங்கள் தான், தற்போது த.வெ.க. முகாமில் பரபரப்பான விவாதிக்கப்பட்டு வருகிறதாம். அதாவது, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்ட நிலையில், அந்த குழுவை வழி நடத்தும் பொறுப்பு செங்கோட்டையனுக்கு தான் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், மேற்கு மண்டலத்தில் த.வெ.க. சார்பில் எடுக்கப்பட்ட தரவுகள், புள்ளி விபரங்களை செங்கோட்டையன் கையில் ஒப்படைத்திருக்கிறதாம் மேலிடம். அது மட்டுமல்லாமல், செங்கோட்டையன் அமைப்புச் செயலாளராக இருக்கும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பும் செங்கோட்டையனிடம் தான் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.இத்தனை நாளாக நிர்வாகிகள் நியமனத்தை புஸ்ஸி ஆனந்த் தான் கவனித்து வந்தார் என்பதால், வேட்பாளர் தேர்விலும் புஸ்ஸி ஆனந்தின் தலையீடு தான் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது.ஆனால், புஸ்ஸி ஆனந்துக்கு செக் வைக்கும் வகையில், 4 மாவட்டங்களை பிரித்து, செங்கோட்டையன் கையில் ஒப்படைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.போதாக்குறைக்கு கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், ஜனவரி மாதத்திற்குள் பிற கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய பிரமுகர்களை த.வெ.க.வில் இணைக்க நடவடிக்கை எடுப்பதாக கூற, மா.செ.க்கள் குஷியில் ஆரவாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் புஸ்ஸி ஆனந்துக்கு தான் மன வருத்தத்தைகொடுத்திருக்கிறது என்கிறார்கள். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக விஜய்யுடன் பயணித்து வரும் புஸ்ஸி ஆனந்துக்கு, கட்சி தொடங்கியதும் பொதுச் செயலாளர் பதவியை கொடுத்தார் விஜய்.விஜய்யின் நிழல் போல இருந்து வரும் புஸ்ஸி ஆனந்த் தான், மாவட்ட செயலாளர் நியமனம் தொடங்கி எல்லா பொறுப்புகளும் நியமித்து வந்தார். ஆரம்பத்தில் கட்சி நிர்வாகிகள் சிலர், புஸ்ஸி ஆனந்த் மீது அதிருப்தி இருந்தாலும், விஜய் பெரிய அளவில் கண்டு கொண்டது கிடையாது. ஆனால், கரூர் சம்பவத்திற்கு பிறகு நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாக விஜய்யிடம் கொதித்தெழ, புஸ்ஸி ஆனந்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் முடிவுக்கு வந்ததாக சொல்கிறார்கள். ஆகையால் தான், செங்கோட்டையனை வைத்து புஸ்ஸி ஆனந்தின் அதிகாரத்தை குறைத்ததாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, த.வெ.க.வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மா.செ.க்களுக்கு மற்றொரு அதிர்ச்சியும் காத்திருந்ததாக கூறப்படுகிறது.அதாவது, பொறுப்பு தர பணம் வாங்கியதாக புகாரில் சிக்கிய மாவட்ட செயலாளர்களுக்கு நேரடியாகவே எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாகசொல்லப்படுகிறது. ஆதவ் அர்ஜூனா கொடுத்த டேட்டா அடிப்படையில் மாவட்ட செயலாளர்களுக்கு டோஸ் கொடுக்கப்படவே, சிலருக்கு வியர்த்து போய் விட்டதாம். அதுமட்டுமல்லாமல், வசூல் போன்ற விவகாரத்தில் ஈடுபட்டால் தேவையில்லாமல் சிக்கலில் சிக்க நேரிடும் என்ற மெசேஜ்ஜும் மா.செ.க்களுக்கு கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இந்த எச்சரிக்கை மாவட்ட செயலாளர்களுக்கானது என்றாலும், மாவட்ட செயலாளர்கள் வசூலித்த தொகையில் புஸ்ஸி ஆனந்துக்கும் பங்கு வந்ததாக கூறப்படுவதால் புஸ்ஸி ஆனந்துக்கும் சிக்கல் வந்திருக்கிறதாம்.ஒரு காலத்தில் புஸ்ஸி ஆனந்த் சொல்வதை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த விஜய், தற்போது மற்றவர்கள் தரப்பையும் கேட்க தொடங்கியிருப்பது புஸ்ஸி ஆனந்துக்கு புகைச்சலை மட்டுமில்லாமல் இருப்புக்கே ஆபத்து வந்து விடுமா? என்ற பயத்தையும் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள் பனையூர் வட்டாரத்தினர்.