டெல்லியில், அமித்ஷாவை சந்தித்த பிறகு பிரஸ் மீட் கொடுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, OPS-ஐ கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என மீண்டும் திட்டவட்டமாக கூறியதோடு, டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் சென்றார். தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த எடப்பாடி பழனிசாமி இறங்கி வந்து விட்டாரா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. தேர்தல் நெருங்கும் நிலையில், டெல்லிக்கு விசிட் அடித்த எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடன் என்னென்ன பேசினார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. கடந்த வாரத்தில் பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து வைக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்திருந்தார். இரண்டு நாட்களாக தமிழகத்தில் முகாமிட்டிருந்த அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எடப்பாடி அமித்ஷாவிடம் அப்பாய்ண்ட்மெண்டே வாங்கவில்லை. சேலம், கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டங்கள் காரணமாகஅமித்ஷாவை சந்திக்காத எடப்பாடி பழனிசாமி, புதன்கிழமையன்று டெல்லிக்கே பறந்து சென்று அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், அமித்ஷாவிடம் பேசியது என்ன என்பது குறித்து பிரஸ் மீட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாக தெரிவித்தார். அப்போது, OPS, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதற்கு ஒரு நாளும் வாய்ப்பே இல்லை என மறுத்து விட்டார். பல முறை தெளிவுபடுத்திய விஷயத்தை மீண்டும் கிண்டி கிளற வேண்டாம் என்ற எடப்பாடி பழனிசாமி, இருவரையும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என சீறினார். அதே சமயம், டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காத எடப்பாடி பழனிசாமி, சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும் எனவும், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது எனவும் எந்தெந்த கட்சிகள் என்பதை தற்போதைக்கு சொல்ல முடியாது எனவும் கூறினார்.ஒன்றுபட்ட அதிமுக மூலமே வெற்றியை சாத்தியப்படுத்த முடியும் என அரசியல் நோக்கர்கள் கூறி வந்தாலும் OPS, சசிகலாவை மீண்டும் இணைத்து கொள்ளக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதையே காட்டுகிறது. OPS, சசிகலா இருவரும் அதிமுக தலைமையை குறி வைத்து வழக்குகளும் போட்டு இருக்கும் நிலையில், இருவரையும் கட்சியில் இனைத்துக் கொள்வது என்றைக்காக இருந்தாலும் ஆபத்துதான் என்பதே எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக உள்ளது. எப்படியும் அமித்ஷாவுடனான சந்திப்பின் போதும் இணைப்பு குறித்து பேசப்பட்டு இருக்கும் என்பதால்தான், மீண்டும் இணைப்பு என்ற வார்த்தைக்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி கறார் காட்டியிருக்கிறார் என்கிறார்கள்.ஆனால், தனி கட்சி தொடங்கிய டிடிவி தினகரனை கூட்டணியில் இணைத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை என்பதையே அமித்ஷாவுடனான சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி மூலம் புரிய வரும் செய்தியாக உள்ளது.கடந்த 2021 தேர்தலில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சுமார் 21 தொகுதிகளில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழக்க அமமுகதான் காரணமாக இருந்தது என்ற நிலையில், மீண்டும் வெற்றி வாய்ப்பை இழந்து விடக் கூடாது என்பதால் டிடிவியை கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி சம்மதித்திருப்பதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தும் நோக்கத்தில் பாஜக முன் வைத்த டிமாண்டுக்கும் எடப்பாடி பழனிசாமி சம்மதித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த மாதத்தின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருக்கும் நிலையில், அதற்குள் கூட்டணியை உருவாக்கி கூட்டணி கட்சித் தலைவர்கள் அத்தனை பேரையும் பிரச்சார மேடையில் ஏற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம் என்ற நிலையில், அதை மனதில் வைத்துதான் அப்பா - மகன் சண்டை ஓயாமல் இருந்தாலும் அன்புமணியை அழைத்து கை குலுக்கி எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் சேர்த்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதையும் பாருங்கள் - விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு