அதிமுகவில் இணைய நான் தயார், டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தயாரா? என்று, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வியெழுப்பிய நிலையில், அரசியல் வரலாற்றில் அவரது நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.அந்த காலத்தில் ஓபிஎஸ்...ஒருகாலத்தில் அதிமுகவின் அஸ்திவாரத்தையே அசைத்து, ஆட்டம் காண வைத்து அதிரடி காட்டிய ஓபிஎஸ், இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான சிறுகூட்டத்தை வைத்துக்கொண்டு அரசியலில் நடமாடுவதைப் பார்க்கும்போது சற்று வேதனையாகத்தான் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசியல் களத்தில், பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தேர்தல் வேலைகளை மின்னல் வேகத்தில் முடுக்கி விட்டுள்ளன. வரும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் அதிமுக, உடைந்து போன தேசிய ஜனநாயக கூட்டணியை ஒட்ட வைத்து, சற்று இறங்கி வந்து அரசியல் எதிரியான டி.டி.வி.தினகரனை அரவணைத்தும் அதிரடி காட்டியிருக்கிறார். டெல்லியின் தலையீட்டால் கூட்டணிக்குள் தினகரன் சேர்க்கப்பட்டதை போல தானும் சேர்க்கப்படமாட்டேனா? என ஓபிஎஸ் இலவு காத்த கிளிபோல் காத்துக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.தனி மரமானார் ஓபிஎஸ்அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை நடத்தி வந்த ஓபிஎஸ், வைத்திலிங்கத்தின் பேச்சைக் கேட்டு உணர்ச்சி மிகுதியில் அதனை கழகமாக மாற்றினார். அதுமட்டுமின்றி ஓபிஎஸ்சை உசுப்பேற்றி வீர வசனங்களையும் பேச வைத்த வைத்திலிங்கம், அடுத்த சில வாரங்களிலேயே திமுகவுக்கு தாவி ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுத்தார். அடுத்ததாக தர்மயுத்தம் பார்ட் ஒன்னிலும் சரி, பார்ட் டூவிலும் சரி ஓபிஎஸ்க்கு பக்க பலமாகவும் சட்டரீதியான போராட்டத்தில் போர்ப்படை தளபதியாகவும் இருந்த மனோஜ் பாண்டியனும் அறிவாலயத்தை அண்டி சென்றுவிட்டதால் தனி மரமானார் ஓபிஎஸ்.சட்டமன்ற தேர்தலில் யாருடன் செல்வது? தனக்கு ஆதரவளித்த குழுவில், மக்களுக்கு பரிட்சயமாகவும் அரசியலில் முகம் தெரிந்த நபர்களாகவும் இருந்த 4 பேரில் இருவர் அறிவாலயத்திலும் இருவர் தவெகவிலும் சரணாகதி அடைந்துவிட்டதால் செய்வதறியாது திணறிபோயுள்ளார் பன்னீர் செல்வம். உடனிருப்பவர்கள் தான் உதறித்தள்ளினார்கள் என்றால், உற்றத்தோழனாக இருந்த டிடிவி தினகரனும் இபிஎஸ் உடன் கைகோர்த்து பன்னீர் செல்வத்தை பரிதாப செல்வமாக மாற்றியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் யாருடன் செல்வது? யாருடன் கூட்டணி வைப்பது என குழப்பத்தில் தவிக்கும் ஓபிஎஸ், அவ்வப்போது தனது தலைமையில் ஒரு கூட்டத்தை கூட்டி, பரபரப்பை கிளப்புவதாக எண்ணி பரிதாப நிலையை படம் போட்டு காட்டி வருகிறார்.இணைய தயாராக இருக்கிறோம்இதன் ஒருபகுதியாக, தேனியில் தனது சொந்த ஊருக்கு சென்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ், எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும், அதிமுகவை மீண்டும் இணைப்பதற்காகவே தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை தோற்றுவித்ததாகவும் கூறினார். டிடிவி தினகரன் நினைத்தால் பிரிந்து இருக்கும் அதிமுக தலைமையை ஒன்றிணைக்க முடியும் என்றும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவித்தால் நாங்களும் இணைய தயாராக இருக்கிறோம் என்றும் ஓபிஎஸ் கூறினார். இனியும் பயனில்லைதேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து யார் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள் என்ற கேள்விக்கு அது பரம ரகசியம் என பதிலளித்த ஓபிஎஸ், இந்த இரண்டாவது தர்மயுத்தம் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோரால் தொடங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அரசியலில் தெளிவான முடிவை எடுக்க முடியாமல், தள்ளாடி வரும் ஓபிஎஸ்சை நம்பி இனியும் பயனில்லை என மாவட்ட வாரியாக அவருக்கு இருந்த ஒன்றிரண்டு ஆதரவாளர்களும் தற்போது மூட்டையை கட்டிக்கொண்டு ஆளுக்கொரு கட்சியாய் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. எடுப்பார் கைப்பிள்ளைமுதல் தர்மயுத்தத்தை குருமூர்த்தி பேச்சை கேட்டு நடத்தியதாகவும் இரண்டாவது தர்மயுத்தத்தை வைத்திலிங்கம் பேச்சை கேட்டு நடத்தியதாகவும், பிரதமர் கூறியதாலேயே அதிமுகவில் இணைந்ததாகவும், சசிகலா சொன்னதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறி ஓபிஎஸ், அரசியலில் தான் எதார்த்த தலைவரல்ல, எடுப்பார் கைப்பிள்ளை தலைவர் என, தன்னை தானே அறிவிக்காமல் அறிவித்துள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை. Related Link இணைய விரும்பும் ஓபிஎஸ்