தமிழகம் வருகை தந்த அமித்ஷா, அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய நடத்திய பேச்சு வார்த்தையில் இன்னும் சுமூக உடன்பாடு எட்டப்படாத சூழலில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி என விஜய்க்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் வகையில், டிடிவி தினகரன் பேசியது கவனிக்க வைத்துள்ளது. யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டிருக்கும் தேமுதிக, அறிவிப்பு வெளியிட ஜனவரி 9ஆம் தேதி நாள் குறித்திருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 2026 தொடங்கி விட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. கூட்டணி கணக்குகளை இறுதி செய்ய கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அரசியல் களமும் பரபரப்பாக மாறி வருகிறது.2 நாள் பயணமாக தமிழகம் வந்த அமித்ஷா, அதிமுகவுடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். திருச்சியில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஹோட்டலில் 2ஆவது நாளாக வேலுமணியை சந்தித்த அமித்ஷா, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த வகையில், 170 தொகுதிகளில் இரட்டை இலை போட்டி என்பதில் உறுதியோடு இருக்கும் அதிமுக, கூட்டணி கட்சிகளுக்கு 64 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்ததால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுகவை 160 தொகுதிக்குள் சுருக்கிக் கொள்ள சொல்லி பாஜக வலியுறுத்தி வருகிறதாம். ஆனால், எடப்பாடி பழனிசாமி உறுதியோடு இருப்பதால் இன்னும் இழுபறி நிலையே நீடிப்பதாக சொல்கிறார்கள். அதிமுக கூட்டணியில் தேமுதிகவும், அமமுகவும் இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்க்கும் நிலையில், பாமகவும் 30 தொகுதிகளுக்கு கீழே குறைய கூடாது என கண்டிப்பு காட்டி வருகிறதாம். ஆகையால், கூட்டணியை பலப்படுத்தும் வகையில், தொகுதிகளை குறைத்துக் கொள்ள சொல்லி பாஜக வலியுறுத்தினாலும், அதிமுக மேலிடத்தில் இருந்து சுமூகமான பதில் கிடைக்கவில்லையாம். EPS-ஐ காரணம் காட்டி, கூட்டணிக்கு வர மறுக்கும் OPS, TTV போன்றவர்களுக்கு தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் இருந்து பிரித்து கொடுக்க பாஜக கணக்கு போடுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் கணக்கு 170ல் உறுதியாக இருக்கிறது. தை மாதம் தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன், எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, பிரேமலதா, டிடிவி ஆகியோரை ஒரே மேடையில் அமர்த்தி காட்ட வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக இருப்பதால், அதற்குள்ளாக தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டும் என முனைப்பு காட்டுகிறார்களாம். இதனால் தான் 1.20 மணிக்கு திருச்சியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட வேண்டிய அமித்ஷா, ஒன்றரை மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு 2.30 மணிக்கு மேல் புறப்பட்டு விமான நிலையம் சென்றிருக்கிறார் என்கிறது பாஜக வட்டாரம்.அதிமுக - பாஜக கூட்டணியின் கள நிலவரம் இப்படி என்றால், தஞ்சாவூரில் பொதுக் குழு கூட்டத்தை கூட்டிய அமமுகவின் டிடிவி தினகரன் விஜய்க்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் வகையில் பேசியிருப்பது கவனிக்க வைத்துள்ளது. கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், வருகிற தேர்தலில் கூட்டணி ஆட்சியில் அமமுக இடம்பெறும் எனவும், தொண்டர்கள், நிர்வாகிகள் மன ஓட்டம் அறிந்து கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார். கூட்டணி ஆட்சியில் இடம்பெற்று, அமமுகவை சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என டிடிவி தினகரன் பேச பேச கூட்டத்தில் ஆரவாரமும் கூடியது. தமிழகத்தில் தற்போதைக்கு கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும் என விஜய் மட்டுமே வெளிப்படையாக அறிவித்து இருக்கும் நிலையில், த.வெ.க. கூட்டணிக்கு சமிக்ஞை கொடுக்கும் வகையில் TTV தினகரன் பேசியிருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதில் இருந்து விஜய்யை புகழ்ந்து பேசி வரும் டிடிவி தினகரன், தற்போது விஜய்யுடன் கூட்டணி என சொல்லாமல் சொல்லியிருப்பதாக பார்க்கப்படுகிறது. அதோடு, பொதுக்குழு கூட்டத்தில் பிரிவினைவாத அரசியலை தமிழகத்தில் ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம் என, டிடிவி நிறைவேற்றிய தீர்மானமும் பாஜகவுக்கு எதிரான தீர்மானமாக பார்க்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகவும் அமமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்ற நிலையில், மீண்டும் TTV பாஜக பக்கம் செல்ல வாய்ப்பு இல்லை என கருதப்படுகிறது. டிடிவி தினகரன் நிலைப்பாடு இப்படி என்றால், தேமுதிகவும் யாருடன் கூட்டணி வைக்கலாம் என, மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டுள்ளது. கோயம்பேடு அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ரகசிய பெட்டி வைத்து தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்துக்கள் அடிப்படையில் வருகிற 9ஆம் தேதி கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நடக்கும் மாநாட்டில் யாருடன் கூட்டணி என அறிவிக்கப்படும் எனவும் பிரேமலதா தெரிவித்து இருக்கிறார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்திடம், 2026ல் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட்டு வழங்கப்படும் என்ற அதிமுகவின் அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, தற்போதைக்கு சட்டமன்றத் தேர்தலில் மட்டுமே தங்களின் முழு கவனமும் இருப்பதாக தெரிவித்தார். தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க. திமுக தரப்பில் இருந்து வட மாவட்ட அமைச்சரான எ.வ.வேலு பேசிக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுக தரப்பிலும் முன்னாள் அமைச்சர் வேலுமணி, பாஜக தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கிறார்கள். அண்மையில் நடந்த கேப்டன் குருபூஜை விழாவில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினும், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இது போக, த.வெ.க.வுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், யார் பக்கம் செல்லும் என்பது 9ஆம் தேதி அறிவிப்பில் தான் தெரியவரும்.