சென்சார் சிக்கலில் சிக்கி, திரைக்கு வர முடியாமல் திணறும் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குரல் கொடுத்திருப்பது நெருப்பில் நெய் ஊற்றியது போல் மாறியுள்ளது. தமிழ்நாட்டு மண்ணில் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடியே விஜய்க்கு ஆதரவாக பதிவு போட்டு பாஜகவை சீண்டிய ராகுலின் மனக்கணக்கு என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.விஜய்க்கு ஆதரவாக ராகுல்காந்தி பதிவுவிஜய்க்கு ஆதரவாக இத்தனை நாளாக காங்கிரஸ் கட்சியினர் மாய்ந்து மாய்ந்து குரல் கொண்டிருந்த நிலையில், தற்போது டெல்லியில் இருந்து ராகுல் காந்தி குரல் கொடுத்திருப்பது ஜனநாயகன் விவகாரத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என காலையில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு, மாலையில் தலைமை நீதிபதி அமர்வில் தடை வாங்கியது தணிக்கை வாரியம். இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், அங்கும் தணிக்கை வாரியம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்சார் போர்டின் நெருக்கடியில் சிக்கி ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழல் இருந்து வரும் நிலையில், திடீரென ராகுல் காந்தி விஜய்க்கு ஆதரவாக பதிவு போட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்அந்த வகையில், விஜய்யின் ஜனநாயகன் படத்தை முடக்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது என குற்றம் சாட்டியிருக்கும் ராகுல் காந்தி, ஜனநாயகன் படத்தை முடக்குவது தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என கூறியிருக்கிறார். அதோடு, தமிழர்களின் குரலை முடக்குவதில் பிரதமர் மோடி என்றைக்குமே ஜெயிக்க முடியாது என்றும் ராகுல் காந்தி கொந்தளித்திருக்கிறார்.ஜனநாயகனுக்கு ஆதரவாக ராகுல் காந்தி குரல்ஜனநாயகன் பட விவகாரத்தில் சென்சார் போர்டு ஆடும் ஆட்டத்தை கண்டிப்பதை தாண்டி விஜய்யின் படத்தை ஒட்டு மொத்த தமிழர்களின் குரலாக பாவித்து ராகுல்காந்தி போட்ட பதிவு ஆச்சரியத்தை தான் கொடுக்கிறது. இதே மாதிரி தான் மெர்சல் பட ரிலீஸில் விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுத்த போதும் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரமாக ஜனநாயகன் விவகாரம் தீயாக கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. அப்போதே காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த் உள்ளிட்ட எம்.பி.க்கள், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்த நிலையில், நீலகிரியில் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்க தமிழகம் வந்த நேரத்தில் ஜனநாயகனுக்கு ஆதரவாக ராகுல் காந்தி குரல் கொடுத்திருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.பாஜகவுக்கு காங்கிரஸ் எரிச்சலை மூட்டுகிறதா?திமுகவினர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை கொண்டாடி வரும் நிலையில், அந்த படத்துடன் ரிலீஸ் ஆக வேண்டிய ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. இந்தி எதிர்ப்பு படமான பராசக்தி படத்தில் காங்கிரஸை, இந்திரா காந்தியை வில்லத்தனமாக சித்தரித்து இருக்கும் நிலையில், பராசக்தி படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூட இளைஞர் காங்கிரஸில் இருந்து குரல் எழுந்தது. இந்த சூழலில், ஜனநாயகன் படத்தை தூக்கி பிடித்து பாஜகவுக்கு காங்கிரஸ் எரிச்சலை மூட்டுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கவனம் பெற்ற ராகுல்காந்தி குரல்தமிழ்நாட்டில் பாஜக மீதான எதிர்ப்பை வலுப்படுத்தும் வகையில் ஜனநாயகன் பட விவகாரத்தை காங்கிரஸ் கையிலெடுத்திருப்பதாக பார்க்கப்பட்டாலும், பின்னணியில் கூட்டணி கணக்குகளும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. ஏனென்றால், த.வெ.க.வுடன் கூட்டணிக்கு செல்லலாம் என காங்கிரஸின் ஒரு தரப்பினர் தொடர்ந்து பேசி வரும் நிலையில், அந்த நிலைப்பாட்டுக்கு எதிரான கோஷ்டியும் காங்கிரஸில் இருக்கிறது. காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார் ஜூனே கார்கே ஆகியோர் திமுக கூட்டணியிலேயே நீடிக்கலாம் என கூறி வரும் நிலையில், மல்லிகார் ஜூனே கார்கேவுக்கு நெருக்கமான நபராக இருக்கும் தமிழக காங்கி ரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் நிலைப்பாடும் அதே மாதிரி தான் இருக்கிறது. ஆனால், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் த.வெ.க. பக்கம் செல்லலாம் என பேசி வரும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தி குரல் கொடுத்திருப்பது கவனிக்க வைத்துள்ளது.விஜய்யின் ஆதரவை வைத்து காங்கிரஸ் ஆட்சிஅதோடு, காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருக்கும் கே.சி.வேணுகோபால் எப்படியாவது ராகுலை சம்மதிக்க வைத்து த.வெ.க. கூட்டணி பக்கம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறாராம். கேரளாவை சேர்ந்த கே.சி.வேணுகோபால் கடவுள் தேசத்து முதலமைச்சர் நாற்காலியை குறி வைத்திருக்கும் நிலையில், விஜய்யின் ஆதரவை வைத்து காங்கிரஸில் ஆட்சியை பிடித்து விடலாம் என கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. 18ஆம் தேதிக்கு மேல் தான் தெரியவரும்இந்த நிலையில், தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என வருகிற 18ஆம் தேதி டெல்லியில் ராகுல்காந்தி ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஆலோசனையில் யாருடன் கூட்டணி? எத்தனை தொகுதிகள் கேட்பது? ஆட்சியில் பங்கு கேட்பதா? இல்லையா? என்பது குறித்து எல்லா முடிவுகளும் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என பழமொழி சொல்வார்கள். அது போல, காங்கிரஸ் திமுக கூட்டணியில் நீடிக்குமா? அல்லது த.வெ.க. கூட்டணிக்கு செல்லுமா? என்பது 18ஆம் தேதிக்கு மேல் தான் தெரியவரும்.இதையும் பாருங்கள் - மாணவர்கள் கேள்வியும் ராகுல் பதிலும்