Also Watch
Read this
தமிழ்நாட்டின், பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.வி.அர்லேகருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

விடை பெற்றார் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநராக, சுமார் 54 மாதங்கள் பணியாற்றிய ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக இடம் மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக, கேரளத்தின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக பதவி ஏற்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, அர்லேகருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து ஆர்.என்.ரவி விடைபெற்ற சில மணி நேரங்களிலேயே, அர்லேகர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

புதிய ஆளுநர்...
கோவாவைச் சேர்ந்த அர்லேகர், RSS பின்னணி கொண்டவர் என்றாலும், அவர் ஒரு 'மக்களின் ஆளுநர்' என்று இமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகாரில் பெயர் எடுத்தவர். கோவா சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தபோது காகிதமில்லா சட்டமன்றத்தை கொண்டு வந்தவர். பீகாரில் பல்கலைக்கழக வேந்தராக அவர் செய்த சீர்திருத்தம், மாநில அரசால் பாராட்டை பெற்றது.

தற்போது கேரளத்தின் ஆளுநராக இருக்கும் அவர், மாநில அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து வருகிறார் என்றே கூறப்படுகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஒரு பொறுப்பு ஆளுநரின் கீழ், தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசு எவ்வாறு இருக்கும், மாநில அரசின் கொள்கை முடிவுகளில் ஆளுநரின் நிலைப்பாடு என்ன? என்னும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளுநர் மாற்றம் நிகழ்ந்துள்ளது மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved