காலை வேளையில் அதுவும் அலுவலக நேரத்தில் மும்பை நகர சாலைகள் எல்லாம் எப்படி இருக்கும் என எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அப்படி இருக்கும் நேரத்தில், டிராபிக் ஜாமில் பலத்த ஹாரன் சத்தத்துடன் திடீரென அங்கு வந்து நின்ற மஹிந்திரா XUV700 காரால் அங்கிருந்தவர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போயினர்.அதில் அப்படி யார் தான் இருந்தார்கள் என கேட்கிறீர்களா? சீருடையில் 6 பள்ளி மாணவர்கள் தான் அதில் இருந்தனர். இந்த குழந்தைகள் போக்குவரத்து மிகுந்த சாலையில் காரை ஓட்டி வந்த வீடியோ தான், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. இது ஒருபுறம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், மறு புறம் விவாதப்பொருளாகவும் மாறி பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது...இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் 9.9 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாகவும், 78 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ பதிவின் கருத்துப் பிரிவில் பலர் எதிர்வினை கருத்துக்களை தெரிவிப்பது மட்டும் அல்லாமல், அந்த மாணவர்களின் பெற்றோர்களை வன்மையாக கண்டித்தும் வருகிறார்கள்.