அங்கன்வாடி ஊழியர்களை, அரசு ஊழியர்களாக்குவோம் என கடந்த தேர்தலின் போது, திமுக அளித்த வாக்குறுதி எண் 313ஐ நிறைவேற்ற வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக 10 லட்சம் ரூபாயும், குடும்ப ஓய்வூதியமாக மாதந்தோறும் 9 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டங்களும் நடைபெற்றன.சென்னை, கிண்டி பேருந்து நிலையம் அருகே தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமர்ந்து போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்றனர்.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில், அங்கன்வாடி பணியாளர்கள் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் குவிந்த அங்கன்வாடி ஊழியர்கள், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்றனர்.நாமக்கல் பூங்கா சாலையில் கைக்குழந்தைகளுடன் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற அங்கன்வாடி ஊழியர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திய பதாகைகளை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டனர்.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து அங்கன்வாடி ஊழியர்கள் நடத்திய மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.