மதுரையில், 7 மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி, தனியார் மருத்துவமனை நிர்வாகம் கேரி பேக்கில் குழந்தையை வைத்திருந்த நிலையில், வீடியோ காலில் தந்தையை பார்த்ததும் கையசைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகர், தபால் தந்தி நகரை சேர்ந்தவர் இப்ராஹிம் ஷா. இவரது மகளும் பெங்களூருவில் வசிக்கும் ஷாகின்சா என்பவரின் மனைவியுமான சுருமி, பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்ததாக தெரிகிறது. ஏற்கனவே சுருமியின் கர்ப்பபை பலவீனமாக இருப்பதாக சொல்லி, ஆசிர்வாதம் மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி அதிகாலை மூன்று மணியளவில் சுருமிக்கு பயங்கரமாக வயிறு வலி ஏற்பட்டதன் காரணமாக, அதே ஆசிர்வாதம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.சுருமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு பிரசவ வலி வந்திருப்பதாகவும் கரு உருவாகி 7 மாதமே நிறைவு பெற்றுள்ளதால் குழந்தை பிழைப்பது கடினம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 28ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் சுருமிக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக சொல்லப்படுகிறது. குழந்தை பிறந்து இரண்டு மணி நேரம் கழித்து குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளதாகவும், நீங்களே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறீர்களா அல்லது மருத்துவமனை ஆய்வகத்திற்காக எடுத்துக் கொள்ளட்டுமா? என செவிலியர்கள் கேட்டதாக பகீர் கூறப்படுகிறது.இந்நிலையில், குழந்தைக்கான இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க குடும்பத்தினரோ ஒரு முறையாவது குழந்தையை பார்க்க வேண்டும் என கோரியுள்ளனர். குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆசை ஆசையாய் பெங்களூருவிலிருந்து வந்துகொண்டிருந்த ஷாகின்சாவுக்கு மகளின் மரணச்செய்தி தலையில் இடியை இறக்கியுள்ளது. இருந்தாலும் குழந்தையை காண்பிக்க சொல்லி ஷாகின்சா வீடியோ காலில் வந்து கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.ஒருவழியாக பிரசவ அறைக்குள் குடும்பத்தினர் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. அங்கு குப்பை கொட்டும் கருப்பு நிற பிளாஸ்டிக் கேரி பேகில் குழந்தை வைக்கப்பட்டதை கண்டு அதிர்ந்து போன குடும்பத்தினர், செவிலியர்களை கடிந்து கொண்டதாக தெரிகிறது. அதுவும் பிரசவ கழிவுகளுடன் சேர்த்தே குழந்தையை கவரில் வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அச்சமயம் வீடியோ காலில் வந்த ஷாகின்சாவும் குழந்தையின் நிலைகண்டு மனம் உடைந்து போனார்.இந்நிலையில், வீடியோ காலில் குழந்தையை காண்பிக்கும் போது திடீரென குழந்தையின் அசைவு தெரிந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குழந்தையை கையில் தூக்கி செவிலியர்கள், மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதற்கு, தாங்கள் ஆக்சிஜன் கொடுத்திருந்ததால் லேசாக கை அசைந்திருக்கும், ஆனால் குழந்தை மீண்டும் பிழைக்க வாய்ப்பே இல்லை என அலட்சியமாக பதில் தந்ததாக தெரிகிறது.மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் வாக்குவாதம் செய்து ஓய்ந்து போன குடும்பத்தினர் ஆம்புலன்ஸை அழைத்து குழந்தையை தூக்கிக் கொண்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். செல்லும் வழியில் கூட பச்சிளங்குழந்தை கண்ணை சிமிட்டி சிணுங்கி அழுத காட்சிகளும் வெளியாகி உள்ளன. குழந்தையும் மருத்துவமனையில் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்துள்ளது.குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையை சரியாக கையாளத்தெரியாமல் உயிரோடு இருக்கும் குழந்தையை இறந்துவிட்டதாக கூறி, கேரி பேகில் பார்சல் கட்டிய ஆசீர்வாதம் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.மருத்துவமனை தரப்பில் விளக்கம் கேட்க முயன்றபோது, முறையாக யாரும் பதிலளிக்கவில்லை. மேலும், பல சாக்குபோக்குகளை சொல்லி அலைக்கழித்துள்ளனர். நியூஸ் தமிழ் செய்திகளுக்காக பாலமுருகன்...