கூலி உயர்வு கேட்டு, கறிக்கோழி பண்ணைகளில் கோழிகளை வளர்க்கும் விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒரு கிலோ சிக்கன் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. விவசாயிகள் போராட்டம் நடத்த காரணம் என்ன? எதிர்ப்பு தெரிவிப்பது யார்? முத்தரப்பு பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.கடந்த 1ஆம் தேதி தொடங்கிய போராட்டம்கூலி உயர்வு கேட்டு, கடந்த 1ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக போராட்டத்தில் கறிக்கோழி பண்ணைகளில் கோழிகளை வளர்க்கும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கறிக்கோழி உற்பத்தி செய்யும் பெரிய, பெரிய நிறுவனங்கள் கோழிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 காசுகள் வளர்ப்பு கூலியாக வழங்கி வருகின்றனர். உற்பத்தி செலவு அதிகரித்த நிலையில், கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் வளர்ப்பு கூலியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டக்காரர்கள் கைது, பேச்சுவார்த்தை ரத்து இதனை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகேசன் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே புதன்கிழமை, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முத்தரப்பு பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்று ரத்து செய்த கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் துறை, அதற்கான காரணத்தையும் அறிக்கையில் குறிப்பிட்டது. கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் வர்த்தக ரீதியிலான ஒப்பந்த விவசாய முறையில் கோழிப்பண்ணைகள் நடத்தி வருவதாகவும், அவர்கள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களில் விலை, அளவு, தரம், நேரம் தொடர்பாக கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் ஏதும் கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் வருவதில்லை என்றும், இது தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை நிலவுவதாகவும், விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சிஇந்நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடைத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக, அந்தந்த மாவட்டத்தில் கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதன்காரணமாக, சிக்கன் விலை 400 ரூபாய்க்கு நெருங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 360 ரூபாய்க்கு ஒரு கிலோ சிக்கன் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசுகறிக்கோழிகளை அதிகளவு விற்பனை செய்யும் இரண்டு பெரிய நிறுவனங்கள் கூலி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இந்த போராட்டம் நீடித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டு வருவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்இதனிடையே கைது செய்யப்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகேசன் உட்பட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதே போல், கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு 20 ரூபாய் கூலி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கறிக்கோழி உற்பத்தி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற, உடனடியாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதையும் பாருங்கள் - சட்டப்பேரவையில் கறிக்கோழி விவகாரம்