வரலாற்றில் முதன் முறையாக, நேற்று 90ஐ கடந்து சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று மேலும் சரிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 90.14 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் வீழ்ச்சி அடைந்து 90 புள்ளி 43 ஆக சரிந்துள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் வாபஸ் பெறப்படுவதாலும் ரூபாயின் மதிப்பு சரிவதாக கூறப்படுகிறது. ரூபாயின் மதிப்பு 90ஐ தாண்டி சரிந்தவுடன் இறக்குமதியாளர்கள் அச்சமடைந்து, கூடுதல் டாலர்களை வாங்கி இருப்பு வைத்ததும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தால், டாலர்களை விற்று கூடுதல் லாபம் பெறவும் இறக்குமதியாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்க ரிசர்வ் வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.