திருப்பரங்குன்றம் விவகாரத்தில், 2014ஆம் ஆண்டு வந்த தீர்ப்பை பின்பற்றி தான் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததாக, திமுக விளக்கம் அளித்து வரும் நிலையில், அந்த விளக்கத்திற்கு எதிர் மாறாக 2014ல் வெளியான தீர்ப்புக்கும், தற்போதைய விவகாரத்திற்கும் துளி கூட சம்பந்தமே இல்லை என்று, பாஜகவின் அண்ணாமலை கூறியிருக்கிறார். மேலும் குறிப்பிட்ட அந்த தூணில் தீபம் ஏற்றுவதில், இஸ்லாமியர்களுடன் 2005ஆம் ஆண்டு உடன்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அணையாமல் எரியும் தீபம் போல, திருப்பரங்குன்றம் விவகாரமும் கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவும், பாஜகவும் எதிர் எதிர் புள்ளியில், எதிர் எதிர் துருவமாக இருக்கும் நிலையில், இரு தரப்பும் மாறி மாறி விளக்கம் கொடுத்து வருகின்றன.இந்த நிலையில், தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நின்ற திமுக அரசு, 2014ல் வந்த தீர்ப்பை பின்பற்றி மலையில் ஏற அனுமதி மறுத்ததாக தெரிவித்தது. அதாவது, 2014ஆம் ஆண்டே மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டதை அமைச்சர் ரகுபதி சுட்டிக்காட்டியிருந்தார்.இந்தநிலையில், கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, திருப்பரங்குன்றம் சர்ச்சை எப்போதில் இருந்து தொடங்கியது? இதுவரை திருப்பரங்குன்றம் சம்பந்தமாக நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவுகள் என்னென்ன என்பது குறித்து விளாவரியாக விளக்கினார்.அந்த வகையில், 1862ஆம் ஆண்டிலேயே திருப்பரங்குன்றம் சர்ச்சை தொடங்கி விட்டது என்ற அண்ணாமலை, 1923ஆம் ஆண்டே அந்த மலையில் எந்த மதத்தினருக்கு எந்தெந்த இடம் சொந்தமானது என்பதை நீதிமன்றம் தெளிவாக வரையறுத்து விட்டது என்றும் கூறினார்.