தமிழ்நாட்டில், மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மணல் கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜரான கனிமவள ஆணையர் மோகனிடம், தமிழ்நாட்டில் தொடரும் மணல் கொள்ளையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆன்லைன் பதிவு முறை, ஜிபிஎஸ் கண்காணிப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, அபராதம் விதிக்கப்படுவதாக மோகன் விளக்கம் அளித்தார். அபராதம் விதிப்பது மட்டுமே போதாது என்றும், குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிமன்றம், மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.