100 நாள் வேலைத் திட்டத்தில் இருந்து, மகாத்மா காந்தியின் பெயரை நீக்க எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடவே மக்களவை முடங்கியது. மத்திய அரசு புதிதாக தாக்கல் செய்திருக்கும் மசோதா காரணமாக 100 நாள் வேலை திட்டம், பேசு பொருளாகியிருக்கும் நிலையில், புதிய மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? இதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து விரிவாக விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.சில ஆண்டுகளாகவே, 100 நாள் வேலைத் திட்டம் விவாதத்திற்குள்ளாகி தான் வருகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சியில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கொண்டு வரப்பட்டது தான் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்.பிற்காலத்தில் இந்த திட்டத்தின் பெயரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என பெயர் மாற்றம் செய்தது காங்கி ரஸ். இந்த நிலையில், 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்ததும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் நிறுத்தப்படுமா? என்ற அச்சம் பரவலாக நிலவியது. இந்த நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை வைத்து, ஆளும் பாஜகவுக்கும், எதிர்க் கட்சிகளுக்கும் இடையே கடுமையான அரசியல் மோதல் எழுந்திருக்கிறது.அதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில், விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் என்ற பெயரில் 100 நாள் வேலை திட்டத்தை மாற்ற முடிவு செய்து, குளிர் கால கூட்டத் தொடரில், புதிய மசோதாவை அறிமுகம் செய்தது மத்திய அரசு.பெயர் மாற்றம் மட்டுமல்லாமல், புதிய மசோதா மூலம் 100 நாள் வேலைத் திட்டத்தில் நிதி பகிர்வு விகிதம் உள்பட சில விதிகளும் மாறுகிறது. அதாவது, 2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம் கிராமப் புறங்களில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் தரப்பட்டது.ஆனால், புதிய மசோதா மூலம் 125 நாட்கள் வேலை நாட்களாக உயர்த்தப்படுகிறது. அதேபோல, வேலைக்கான ஊதியம் ஒரு வாரம் அல்லது அதிகபட்சம் 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்ற விதியையும் புதிய மசோதா முன் மொழிகிறது. மேலும், புதிய மசோதா மூலம் விவசாயம் மற்றும் அறுவடை காலங்களில் 100 நாள் வேலை திட்டம் இருக்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்பு 100 நாள் வேலைத் திட்டத்திற்கான முழு நிதியும் மத்திய அரசு தான் ஒதுக்கி வந்தது என்ற நிலையில், தற்போது புதிய மசோதா மூலம் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் ஒதுக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இது வட கிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் 90 : 10 என்ற விகிதத்தில் மாறுபடும் எனவும், யூனியன் பிரதேசங்களுக்கு 100 சதவீதம் மத்திய அரசே ஏற்கும் எனவும் சொல்லப்படுகிறது.புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்த போது, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு போராட்டத்திலும் ஈடுபட்டன.மகாத்மா காந்தி பெயரை நீக்குவதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கினாலும், நிதி பகிர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்திருப்பது மாநில அரசுகளுக்கு நிதிச் சுமையை அதிகரிக்கும் வகையில் இருப்பது எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சில ஆண்டுகளாகவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருவதாக தமிழகம் போன்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.மத்திய அரசு நிதி ஒதுக்காததால் பயனாளிகளுக்கு சம்பளம் கொடுப்பதில் சிக்கல் இருப்பதாக கூறி வருகின்றன.இதுகுறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்ட அறிக்கையில், 2021-2022-ம் ஆண்டில் 98 ஆயிரத்து 468 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மத்திய அரசு, அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைத்துக் கொண்டே வந்தது எனவும், நிதி பற்றாக்குறை காரணமாக வேலை நாட்களை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது எனவும் கூறி இருக்கிறார்.மேலும், விவசாய காலங்களில் 60 நாட்கள் வேலை இருக்காது என்பதன் மூலம் வேளாண் பணி இல்லாதவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் ஐ.பெரியசாமி.கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது தான், 100 நாள் வேலைத் திட்டத்தின் தினசரி ஊதியம் 294 ரூபாயில் இருந்து 319 ரூபாயாக உயர்த்தப்பட்டது. வட மாநிலங்களில் 100 நாள் வேலைத் திட்டம் மூலம் எக்கச்சக்கமான பயனாளிகள் பயனடைந்து வரும் நிலையில், தற்போது மத்திய அரசின் புதிய மசோதா மூலம் நாடு முழுவதும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பதற்றம் நிலவி வருகிறது.இது ஒரு பக்கம் இருக்க, புதிய மசோதா மூலம் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிய வேண்டிய பயனாளிகள், வறுமை குறியீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. வறுமை குறியீட்டை அளவீடாக கொண்டு பயனாளிகள் நியமிக்கப்படும் போது, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து பயனாளிகள் எண்ணிக்கை குறையும்.ஏனென்றால், காலம் காலமாக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் வறுமை ஒழிப்பில் முன்னிலையில் இருக்கும் நிலையில், அதன் மூலம் குறைந்த எண்ணிக்கையில் தான் பயனாளிகள் தேர்வு செய்யப்பட வாய்ப்பு எனக் கூறப்படுகிறது.இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாக தான் தமிழ்நாட்டு மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தின் பயன் கிடைக்கும் எனவும், மகாத்மா காந்தி பெயரை தூக்கி விட்டு வாயில் நுழையாத வட மொழியை திணித்து இருக்கிறார்கள் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே, முறையற்ற GST நிதி பகிர்வு, கல்வி நிதி, பேரிடர் நிதி, வளர்ச்சி நிதி என எந்த நிதியையும் முறையாக ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டி வரும் தமிழக அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்திலும் 4 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக கூறி வருகிறது. தற்போது, பெயர் மாற்றம், விதிகள் மாற்றம் மூலம் புதிய பிரச்சனை கிளம்பியிருக்கிறது.100 நாள் வேலை திட்டம் மூலம் கிராமப்புற பெண்கள் பயனடைந்து வரும் நிலையில், அந்த திட்டத்தை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்தாமல் முறையாக பயனாளிகளுக்கு சென்று சேர்க்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை.