தனது கடைசி சினிமா மேடையான ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் மறைமுகமாக அரசியலும் பேசிய விஜய், தனியாக வருவேனா? அணியாக வருவேனா? என்பதெல்லாம் சஸ்பென்ஸிலேயே இருக்கட்டும் என கூறியது விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. சஸ்பென்ஸ் கூட்டணி என விஜய் குறிப்பிடுவது யாரை? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், விஜய்யுடன் யார் யாரெல்லாம் கூட்டணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.ஜனநாயகன் மேடையில் சினிமா சம்பந்தமாக விஜய் பேசியிருந்தாலும், அரசியல் ரீதியான விவாதம் தான் சூடு பிடித்து வருகிறது. மேடையில் பேசிய விஜய், தாம் தனியாக வருவேனா? அணியாக வருவேனா? என எல்லாரும் கேட்கிறார்கள். 33 வருஷமாக மக்களோடு மக்களாக, அணியாக தானே இருந்திருக்கிறோம் என்ற விஜய், இப்போதும் தெளிவாக சொல்லவில்லை என சிலர் சொல்வார்கள். அது சஸ்பென்ஸிலேயே இருக்கட்டும் என பொடி வைத்து பேசியிருந்தார். விஜய்யின் இந்த பேச்சை தேர்தல் கூட்டணிக்கான சமிஞையாக சம்பந்தப்படுத்தி பல விவாதங்கள் எழுந்துள்ளது. அதோடு, விஜய் யாரை மனதில் வைத்து இப்படியெல்லாம் பேசுகிறார் என்ற கருத்துகளும் நிலவி வருகிறது. அந்த வகையில், விஜய்யுடன் யார் யாரெல்லாம் கூட்டணிக்கு வர வாய்ப்பு என்ற இடத்தில் காங்கிரஸ் தான் முதலில் இருக்கிறது.சமீபத்தில் பேசிய காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் கிரிஷ் ஜோடங்கர், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு கேட்போம் என கூறியிருந்தது கவனிக்க வைத்தது. இதுவரைக்கும் காங்கிரஸின் 2ஆம் கட்ட தலைவர்கள் மட்டுமே ஆட்சியில் பங்கு என பேசி வந்த நிலையில், தற்போது கிரிஷ் ஜோடங்கர் மாதிரி காங்கிரஸின் மேலிடத்தில் இருப்பவர்கள் குரல் எழுப்புவதும், அதனை மாநில தலைவர் செல்வபெருந்தகை ஆமோதித்து பேசுவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால், என்னென்ன பலம் என்பதை பார்க்க வேண்டியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சிறுபான்மையினர் வாக்கு வங்கி அதிகமாக இருக்கும் நிலையில், விஜய்க்கும் சிறுபான்மையினர் மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு இருப்பதாக கணிக்கப்படுகிறது.இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுடன் சேர்ந்தால் சிறுபான்மை வாக்குகள் மொத்தமாக விஜய் பக்கம் TRANSFER ஆக வாய்ப்பு என சொல்லப்படுகிறது. கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி போன்ற எல்லை மாவட்டங்களிலும், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டங்களிலும் காங்கிரஸுக்கு வலுவான ஆதரவு இருக்கும் நிலையில், அந்த ஆதரவு விஜய் தரப்புக்கும் கை கொடுக்கும் என சொல்லப்படுகிறது. அதோடு, விஜய்க்கும் ராகுல் காந்திக்கும் இடையே இருக்கும் நட்பு வருகிற தேர்தலில் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்பதால், விஜய் சொன்ன மாதிரி சஸ்பென்ஸை எதிர்பார்க்கலாம்.அடுத்ததாக, வட மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூகத்தின் வாக்கு வங்கியை வைத்திருக்கும் பாமகவும் இன்னும் கூட்டணியை உறுதி செய்யாத நிலையில், விஜய் பக்கம் நோக்கி அன்புமணி நகர வாய்ப்பு என பேசிக் கொள்ளப்படுகிறது. விஜய்க்கும், அன்புமணிக்கும் நெருங்கிய நட்பு வலை இருக்கும் நிலையில், விஜய்யும், அன்புமணியும் சேர்ந்தால் வட மாவட்டங்களில் பிரதான கட்சியான அதிமுக, திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு எனவும் கணிக்கப்படுகிறது. வட மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கூடிய வாக்கு வங்கியை பாமக வைத்திருக்கும் நிலையில், த.வெ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியில் பங்கும் கிடைக்கும் என்பதால் யோசிக்க கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம், விஜய்யுடன் கூட்டணியா என எப்போது கேள்வி கேட்டாலும் அன்புமணி மறுப்பு தெரிவிக்காமல் இருப்பதும் கவனிக்க வேண்டியுள்ளது. அடுத்ததாக எந்த கட்சி என்ற வரிசையில் தேமுதிகவை வைத்து பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, விஜய்யை தங்கள் வீட்டு பிள்ளை என பிரேமலதா கூறி வரும் நிலையில், விஜய்யின் திரை வாழ்க்கைக்கு உதவியவர் விஜயகாந்த் என்ற செண்டிமெண்டும் WORK OUT ஆகி கூட்டணியாக மாறலாம் என கணிக்கப்படுகிறது. அண்மையில் பியூஷ் கோயல் சென்னை வந்த போது, அதிமுக கூட்ட ணியில் தேமுதிகவுக்கு 6 இடங்கள் ஒதுக்க இருப்பதாக வெளியான தகவலை கேட்டு ஷாக் ஆன பிரேமலதா, எந்த கட்சி இப்படி தகவலை வெளியிட்டதோ, அந்த கட்சிக்கு அழிவு தொடங்கி விட்டது என சாபம் விடுத்தார். ஆனாலும் கூட, கேப்டன் விஜயகாந்தின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்திற்கு திமுக, அதிமுக, பாஜக தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது அதிமுக, திமுகவுக்கு மாற்று என கூறி தான், வாக்குகளை அறுவடை செய்தார் என்ற நிலையில், விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் மீண்டும் அதே பிரச்சாரத்தை கையிலெடுக்கலாம் என சொல்லப்படுகிறது.அடுத்ததாக, டிடிவி தினகரனின் அமமுகவை பார்க்க வேண்டியுள்ளது. தென் மாவட்டங்களில் வலுவாக இருக்கும் அமமுகவுக்கு ஒரே எதிரியாக இருப்பது அதிமுகவின் EPS தான் என்ற நிலையில், அந்த கட்சியும் விஜய்யுடன் கூட்டணியில் ஐக்கியமாகலாம் என சொல்லப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட அமமுக தான் காரணம் என்ற நிலையில், விஜய்யுடன் கூட்டணி வைத்தால் தென் மாவட்டங்களில் த.வெ.க.வுக்கு பலம் கிடைக்க வாய்ப்பாக இருக்கும். இதே நிலை தான் OPSக்கும். சமூக வாக்கு என்ற புள்ளியில் OPS பலமாக இருக்கும் நிலையில், த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் தென் மாவட்ட வாக்குகளை அள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தென் மாவட்டங்களில் அதிமுக வலுவிழந்து இருக்கும் நிலையில், OPS, TTV த.வெ.க. பக்கம் சென்றால் குறிப்பிட்ட சமூகவாக்குகள் விஜய்க்கு விழும் என்பதோடு, அது திமுகவுக்கும் நெருக்கடியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.இதுதவிர்த்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரி வரும் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமியும் விஜய் பக்கம் செல்ல சாத்தியக்கூறுகள் இருக்கிறது. தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் முகமாக பார்க்கப்படும் கிருஷ்ணசாமி மூலம் குறிப்பிட்ட சமூக வாக்குகள் விஜய்க்கு விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேபோல, பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சியும் விஜய் பக்கம் செல்லலாம் என சொல்லப்படுகிறது. சமீப காலமாக விஜய்க்கு ஆதரவாக பேசி வரும் பூவை ஜெகன் மூர்த்திக்கு, வட மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மத்தியில் கணிசமான ஆதரவு இருக்கும் நிலையில், அந்த ஆதரவு விஜய்க்கு உதவும் என சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணியில் தொடர்ந்தால் ஒரு சீட்டில் மட்டுமே போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட சீட்களில் போட்டியிட விரும்பும் பூவை ஜெகன் மூர்த்தி, த.வெ.க. கூட்டணியை நாட வாய்ப்பு என கணிக்கப்படுகிறது.