தமிழகத்தில், ஆட்சி அதிகாரம் யாருக்கு என்பதில் சிறுபான்மை சமூக வாக்குகள் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், வருகிற 2026 தேர்தலுக்கு அந்த வாக்குகள் யார் பக்கம் செல்லும் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், போட்டி போட்டிக் கொண்டு கிறிஸ்துமஸ் விழாவுக்கு திமுகவும், அதிமுகவும் அறிவிப்பு வெளியிடுவது வாடிக்கை தான் என்றாலும், விஜய்யின் வருகையால் கிறிஸ்துமஸ் விழாவில், திமுக தனி கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படும் நிலையில், பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.திமுக சார்பில், ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் விழா நடத்தப்படுவது வழக்கம் தான் என்றாலும், இந்த ஆண்டு விழாவுக்கு பின்னணியில் பல அஜெண்டா ஒழிந்திருப்பதாக கூறப்படுகிறது.2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் சுமார் 44 லட்சம் பேர் கிறிஸ்தவர்கள் என்ற நிலையில், தமிழக அரசியலிலும் கிறிஸ்தவ வாக்கு வங்கி, முக்கிய பங்கு வகிக்கும். எப்போதுமே, கிறிஸ்தவ வாக்குகளை கவர திமுக, அதிமுக இடையே கடும் போட்டியும் இருக்கும். ஆனால், வருகிற தேர்தலில் கிறிஸ்தவ சமூக வாக்குகளுக்கு குறி வைத்து விஜய்யும் களத்தில் இருப்பதால், போட்டி இன்னும் கடுமையாகியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.தமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளும் கிறிஸ்துமஸ் விழாவை நடத்துவது வழக்கம் தான் என்றாலும், இந்த ஆண்டு அப்படி நகர்ந்து சென்று விட முடியாது என்பது தான் கள நிலவரமாக இருக்கிறது.வருகிற 20ஆம் தேதி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நெல்லையில் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கவனிக்க எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜுக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.விழாவை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என இனிகோ இருதயராஜும் விழா ஏற்பாடுகளை தீவிரமாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது. விழாவில் கிறிஸ்தவ சமூகத்தின் முக்கிய முகங்களாக இருக்கும் பேராயர்கள் பங்கேற்பதோடு, கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.இதுமட்டுமின்றி சபாநாயகர் அப்பாவு, எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் நேரு, கீதா ஜீவன், சா.மு.நாசர், மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. திமுகவில் கே.என்.நேரு, எ.வ.வேலு, செந்தில் பாலாஜி போன்றோர் எப்படி முக்கியமான விவகாரங்களில் முக்கியத்துவம் பெறுகிறார்களோ, அதே போன்று கிறிஸ்தவ வாக்குகளை பொருத்தவரை இனிகோ இருதயராஜூம் ஒரு முக்கியமான நிர்வாகி என சொல்லப்படுவது உண்டு. இந்த கிறிஸ்துமஸ் விழாவை அவர் 10 ஆண்டிற்கும் மேலாக தொடர்ச்சியாக நடத்தி வந்தாலும், இந்த முறை முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு முழுக்க முழுக்க விஜய் தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக சென்னையில் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் தான் முதலமைச்சர் பங்கேற்பார் என்ற நிலையில், இந்த ஆண்டு, நெல்லையில் நடத்தப்படுவதற்கும், பிரம்மாண்டமாக திட்டமிடுவதற்கும் விஜய் மட்டுமே காரணம் என சொல்லப்படுகிறது. அதாவது, திமுக வசம் இருந்த கிறிஸ்தவர்கள் வாக்கு வங்கி, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவரான விஜய் பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாக, உளவுத் துறை மூலம் வந்த ரிப்போர்ட் காரணமாகவே, கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தான் பெரும்பான்மையாக கிறிஸ்தவ சமூகத்தினர் வசித்து வருகின்றனர் என்ற நிலையில், அந்த மாவட்டங்களில் விஜய்க்கும் கணிசமாக ஆதரவு இருப்பதாக ரிப்போர்ட் வந்ததால் தான் விழாவை நெல்லையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.சிறுபான்மை சமூக வாக்குகள் திமுகவின் பலமாக பார்க்கப்படும் நிலையில், அந்த வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள, நெல்லை கிறிஸ்துமஸ் விழா உதவும் என்பது அறிவாலய தரப்பின் நம்பிக்கையாக இருக்கிறது.இது ஒரு பக்கம் இருக்க, வழக்கம் போல அதிமுகவும் வருகிற 18ஆம் தேதி சென்னையில் கிறிஸ்துமஸ் பெருவிழா எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவித்துள்ளது.ஆனால், வாக்குகளை பிடிக்க அரசியல் கட்சிகள் இடையே போட்டி இருந்தாலும், வருகிற தேர்தலில் கிறிஸ்தவர்கள் யார் பக்கம் நிற்பார்கள் என மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஒரே சமூகம் என்பதால், விஜய் மீது கிறிஸ்தவ மக்களுக்கு நம்பிக்கை இருந்தாலும், அதற்காக மட்டுமே விஜய் பக்கம் சென்று விடுவார்களா? என்பது கேள்விக்குறி தான். கொள்கை எதிரியான பாஜகவை விமர்சனம் செய்வதில் விஜய் மென்மையான போக்கை கடைபிடிப்பது, தாம் சார்ந்த மக்கள் மத்தியில் அவர் மீது நம்பிக்கையை விதைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துஉள்ளது.அதே சமயம், இதற்கு முன்பு சிறுபான்மை சமூக மக்களின் உரிமை சார்ந்த விஷயங்களில் திமுக பலமான ஆதரவை கொடுத்திருக்கிறது என்பதால், கிறிஸ்தவ வாக்குகளைப் பொருத்தவரை தற்போது வரை திமுகவுக்கு பிளஸ் பாயிண்டாகத் தான் பார்க்கப்படுகிறது.