சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நெல்லை ராதாபுரம் தொகுதியில் சீனியரான சிட்டிங் எம்.எல்.ஏ. அப்பாவுக்கே சீட்டு கிடைக்குமா? கிடைக்காதா? என குழப்பம் நிலவி வருகிறது. குவாரி விவகாரத்தில் அடிக்கடி அப்பாவு பெயர் அடிபடுவது, தொகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்த, தென் மாவட்டங்களில் நேரடியாக சபரீசனே களமிறங்கி தேர்தல் பணிகளை கவனித்து வருவதாக புதிய தகவலும் கிடைத்துள்ளது.திமுக வேட்பாளர் யார்?ராதாபுரம் தொகுதியில், திமுக சார்பில் களமிறங்குவது யார்? என்ற விவாதம் தான் நெல்லை மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால், ராதாபுரம் தொகுதியில் தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ.வாக திமுகவின் சீனியரான சபாநாயகர் அப்பாவு இருந்து வருகிறார். என்ன தான் சீனியராக இருந்தாலும் தொகுதி மக்கள் மத்தியில் அப்பாவு மீது பெரிய அபிப்ராயம் இல்லை என்றே சொல்லப்படுகிறது. அதாவது, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனிம வளக் கொள்ளை குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக ஒரே இடத்தில் 20 குவாரிகள் இயங்கி வருவதாக வீடியோக்களும் வெளியாகின. நெல்லையில் இருந்து கனிம வளங்களை வெட்டி எடுத்து கேரளாவுக்கு கடத்தி வருவதாக எழுந்த குற்றச்சாட்டில் சபாநாயகர் அப்பாவு பெயரும் அடிபடுவது, மக்கள் மத்தியில் அவருக்கு எதிரான மன நிலைமையை உருவாக்கியிருக்கிறது. இப்படி அப்பாவுவின் இமேஜ், டேமேஜ் ஆகி கிடக்க, அண்மையில் வள்ளியூரில் நிர்வாகிகளை சந்தித்து பேசிய முதலமைச்சரின் மருமகன் சபரீசன், ராதாபுரம் தொகுதி திமுகவுக்கு சாதகமாக இல்லை என வெளிப்படையாகவே பேசியதாக சொல்லப்படுகிறது. கிடைக்குமா? கிடையாதா?சபரீசன் பேசிய தகவல், நிர்வாகிகள் மத்தியில் தீயாக பரவ, அப்போதில் இருந்தே தனக்கு சீட்டு கிடைக்குமா? கிடைக்காதா? என அப்பாவு தரப்பு புலம்ப தொடங்கியிருக்கிறதாம். இது தான் சாதகம் என நினைத்து அப்பாவுக்கு போட்டியாக ராதாபுரம் தொகுதியை கைப்பற்ற நினைத்த சிலர் குஷியில் ஆழ்ந்திருக்கிறார்களாம். அந்த வகையில், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல், நெல்லை முன்னாள் எம்.பி.யான ஞானதிரவியம் ஆகியோர் புதிய உத்வேகத்துடன் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட சீட் வாங்க முனைப்பு காட்டி வருகிறார்களாம். மக்களிடம் பதிய வைக்க வேண்டும் என்பதற்காக எம்.பி.யாக இருக்கும் போது நெல்லை தொகுதியில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை வீடியோவாக கிரியேட் செய்து ஞானதிரவியம் தரப்பு பரப்ப தொடங்கியிருக்கிறது.கேள்வியும் பதிலும் இதெல்லாம் தெரிந்து கொண்ட அப்பாவு தரப்பு, வெற்றியோ? தோல்வியோ? முதலில் சண்டை செய்ய வேண்டும் என யோசித்து கோதாவில் இறங்கி நலத்திட்ட உதவிகள் கொடுப்பது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என ஆர்வம் காட்ட தொடங்கி விட்டாராம். இதற்காகவே, மாணவ, மாணவிகள் கேள்வி கேட்க அப்பாவு பதிலளிப்பது போல கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. குவாரி விவகாரம் குறித்து அடிக்கடி எழும் சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில், நிகழ்ச்சியில் வேண்டுமென்றே முன் தயாரிப்பாக மாணவியை கேள்வி கேட்க வைத்து அப்பாவு பதில் சொல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் தனது பெயரிலோ, குடும்பத்தினர் பெயரிலோ குவாரியே இல்லை மறுத்திருக்கிறார் அப்பாவு. இருப்பினும், கனிம வளக் கொள்ளை குறித்து எழும் புகார்கள் ராதாபுரம் தொகுதியில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றே கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ராதாபுரம்?இது ஒரு பக்கம் இருக்க, ராதாபுரம் தொகுதி சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால், கிழக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் என்பவரும் சீட்டு கேட்டு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ராதாபுரம் தொகுதியை குறி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுத்திருக்கும் ஏ.ஆர்.ரகுமானும் களத்தில் இருப்பதால் யாருக்கு தான் சீட்டு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சிட்டிங் எம்.எல்.ஏ. அப்பாவுவுக்கே மீண்டும் சீட்டு கிடைக்குமா? அல்லது வேறு யாருக்கும் கிடைக்குமா? என கணிக்க முடியாமல் உடன்பிறப்புகள் தவித்து வருகின்றனர். கடைசியாக, திமுகவினரின் போட்டியை சமாளிக்க முடியாமல் ராதாபுரம் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கி விடக் கூட வாய்ப்பு இருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது. Related Link கனவை கலைக்கும் மாற்றுக்கட்சியினர்