அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை முன்வைத்து தேர்தல் அரசியலுக்குள் நுழைந்த விசிக, 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என தடாலடியாக பல்டி அடித்திருப்பது விவாதத்திற்கு வழி வகுத்துள்ளது. விசிகவின் மனமாற்றம் திமுகவுக்கு நெருக்கடி இல்லாத நிலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திடீர் மாற்றத்திற்கு பின்னணி என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.வருகிற 2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என விசிக தலைவர் திருமாவளவனே பேசியிருப்பது, திமுகவுக்கு இருந்த நெருக்கடியை சுலபமாக்கியிருக்கிறது. விசிக தேர்தல் அரசியலுக்குள் நுழைந்ததில் இருந்தே அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கருத்தை தீவிரமாக வலியுறுத்தி வருகிறது. 2019 மக்களவை தேர்தலில் இருந்தே திமுக கூட்டணியில் பயணித்து வரும் விசிக, 2021 தேர்தலில் ஆட்சி அதிகாரம் பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை.பின்னர், 2023 பிற்பகுதியில் ஆதவ் அர்ஜூனா மூலம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோஷம் ஒலிக்க தொடங்கியது. பல்வேறு காரணங்களால் ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்து விலகிய நிலையில், அதற்கு பிறகு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அவ்வப்போது திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என வலியுறுத்தி வந்தார். இது ஒரு பக்கம் இருக்க, இடையில் கட்சி தொடங்கிய விஜய்யும் தன்னுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என அறிவிக்க, விசிகவின் குரலுக்கு மேலும் வலு சேர்த்தது போல இருந்தது.இதனால், விஜய்யை வைத்து திமுக கூட்டணியில் தங்களது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை விசிக அழுத்தமாக வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிகவின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், 2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்றதோடு, காலம் கனியும் போது அந்த கோரிக்கையை வலியுறுத்துவோம் எனவும் கூறினார். மேலும், வருகிற தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற ரவிக்குமார், விசிகவுக்கு இரட்டை இலக்கத்தில் சீட்டு கேட்டு வாங்குவோம் என உறுதியாக தெரிவித்தார்.இதைப்போல சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், 2026 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிபந்தனையை திமுகவிடம் விசிக வைக்கவில்லை என்றார். அதே சமயம் அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையை கைவிடவில்லை எனவும் உறுதிபட கூறினார்.வருகிற தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்டு, கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பது போல விசிக பல்டி அடித்திருக்கிறது. 2016 மக்கள் நல கூட்டணியில் கிடைத்த படு தோல்விக்கு பிறகு திமுக கூட்டணியில் ஐக்கியமான விசிக தான் முதன்முதலில் ஆட்சி அதிகாரம் என பேச தொடங்கியது.விசிகவை தொடர்ந்து காங்கிரஸின் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் ஆகியோரும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம் என போர்க்கொடி தூக்கி வந்தனர்.ஆனால், பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியை பரிதாபத்திற்குள்ளாகியுள்ளது. பீகாரில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது என்ற நிலையில், இதன் மூலம் தமிழகத்திலும் காங்கிரஸின் பேர வலிமை குறைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. அதோடு, 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 5 இடங்களில் வென்றது. அதேபோல, 2016 தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் 8 இடங்களில் மட்டும் தான் வெல்ல முடிந்தது. 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.இந்த நிலையில், பீகார் தேர்தல் முடிவுகள் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தான் சீட்டு கொடுக்க வேண்டும் என திமுகவினரும் சமூக வலைதளத்தில் பேசி வருவதை பார்க்க முடிகிறது. ஆகையால், கடந்த முறை கிடைத்த இடங்கள் கூட இந்த முறை கிடைக்குமா? என்பது சந்தேகமாக இருக்க, அண்மையில் பேட்டியளித்த செல்வப்பெருந்தகை, காங்கிரஸூக்கு அதிகாரத்தை சுவைக்கும் எண்ணம் இருந்தது இல்லை என கூறியிருந்தார். பீகார் தேர்தல் முடிவுகள் தொடர்பான கேள்விக்கு செல்வபெருந்தகை அளித்த இந்த பதில், தமிழக காங்கிரஸில் சிலர் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என பேசி வந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தான் இருந்தது.இந்த நிலையில், காங்கிரஸ் போல விசிகவும் வருகிற தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என பல்டி அடித்திருக்கிறது. ஆட்சியில் பங்கு கேட்டு ஏற்படும் நெருக்கடியால் திமுக கூட்டணி சிதற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த கணிப்பை பொய்யாக்கும் வகையில் ஆட்சி அதிகாரம் என பேசி வந்த விசிக, காங்கிரஸ் கட்சிகளே பின் வாங்க தொடங்கியிருக்கின்றன.இதனால், திமுகவுக்கும் எந்த நெருக்கடியும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணி தலைமை கோபத்திற்கும், வருத்தத்திற்கும் ஆளாக கூடாது என விசிகவும், காங்கிரஸும் பக்குவமாக பார்த்து காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம் என்பது விசிக தலைமையின் முடிவாக இருந்தாலும், இப்படியே எத்தனை நாளைக்கு 2 சீட்டுக்கும், 4 சீட்டுக்கும் கை கட்டி நிற்பது என்ற அம்பேத்கர் திடல் வாசிகளின் ஆதங்கமும் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.இதையும் பாருங்கள் - கூட்டணி கணக்கு, பக்கா பிளான் வைத்திருக்கும் அதிமுக-பாஜக | AIADMKBJPAlliance | Election2026