யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது உலகக் கோப்பை: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு! சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடத்தும் டி-20 உலகக் கோப்பை தொடர், இந்த முறை இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, உலகக் கோப்பை வெற்றிக்கிண்ணம் பல்வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில், நேற்று இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாண மண்ணுக்குக் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை 7:30 மணிக்கு தம்புள்ளையில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய உலகக் கோப்பை, வழிநெடுகிலும் பல நகரங்களைக் கடந்து யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தது காலை 8:30: மிஹிந்தலை நகரத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. காலை 10:30: வவுனியா நகரத்தை வந்தடைந்தது. மதியம் 12:00: கிளிநொச்சி நகரில் காட்சிப்படுத்தப்பட்டது. மாலை 3:30 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த உலகக் கோப்பைக்குத் தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை 3:30: யாழ்ப்பாணம் கச்சேரி பகுதிக்கு அருகே கொண்டு வரப்பட்டது. மாலை 4:25: வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வைக்கப்பட்டது. மாலை 6:20: துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மாலை 6:40: யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டது. இரவு 7:10: இறுதியாக யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. தொடரை நடத்தும் நாடுகளில் ஒன்று என்ற அடிப்படையில், கடந்த 21-ஆம் தேதி இலங்கையில் இந்த உலகக் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள முதலாவது ஆட்டத்தில் நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. அன்றுடன் இந்த உலகக் கோப்பைத் திருவிழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. தற்போது இலங்கையின் பல்வேறு முக்கிய நகரங்களுக்குக் கொண்டு செல்லப்படும் இந்த வெற்றிக்கோப்பை, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. Related Link ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதியில் தோல்வியடைந்த ஜோகோவிச்