விளையாட�ட�

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஓய்வு | டென்னிஸ் உலகில் தவிர்க்க முடியாத மாவீரன்

        20

டென்னிஸ் உலகில் முடிச்சூடா மன்னனாக வலம் வந்த ரோஜர் பெடரர் சர்வதேச டென்னிஸ் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். சாதனைகளை தன் மணிமகுடத்தில் பதித்த ஜாம்பவான் பெடரரை கொண்டாடி தீர்க்கிறது ரசிகர்கள் உலகம்... காரணம் என்ன? அவர் சாதித்தவை என்ன என்பதை தற்போது காணலாம்.

களத்தில் ஆக்ரோஷம், சாதுர்யம்... யாரையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை... தோல்வி என்று ஒட்டு மொத்த கூட்டமே நினைத்தாலும் விட்டுக்கொடுக்காத தன்மை... என 1998-ம் ஆண்டில் டென்னிஸ் களத்தில் குதித்தது ஒரு இளம் புயல்... 17 வயதில் ரோஜர் பெடரர் ஏடிபி தொடர்களில் களம் கண்ட காலத்தில், டென்னிஸ் உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக நின்று கொண்டிருந்தார் பீட் சாம்பிராஸ்....

சாம்பிராசை எல்லாம் ஜெயிக்க முடியாதுப்பா... ஜெயிச்சாலும் அவர் செய்த சாதனைய எல்லாம் செய்ய முடியாது என ஆருடம் கணித்து கொண்டிருந்தவர்களுக்கு களத்திலேயே பதிலளிக்க தொடங்கினார் பெடரர்.. களம் கண்ட 5 ஆண்டுகளிலேயே டென்னிஸ் உலகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறினார்... 2003-ம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றியதில் இருந்து தொடங்கியது அவரது ஆதிக்கம்.... அடுத்த ஆண்டில் பிரெஞ்ச் ஓபன் நீங்கலாக அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும் பெடரர் கைவசம் வந்தன...

2 ஆயிரத்தின் தொடக்கத்தில் சாம்பிராசின் வீழ்ச்சி தொடங்கியதும், உலக டென்னிசின் முகமாக மாறினார் பெடரர்... நேர்த்தியான, வித்தியாசமான ஷாட்கள் என களத்தில் ரோஜர் பெடரர் இருந்தாலே, ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்... 14 ஆண்டுகளில் 30 கிராண்ட்ஸ்லாம் பைனல்களை கண்டவர்... உலகின் மிகப்பெரிய விளையாட்டு ஜாம்பவான்களும், பெடரரின் ரசிகர்கள்... பெடரருக்காவே போட்டிகளை கண்டு களித்தவர்களில் ஒருவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்...

குறிப்பாக விம்பிள்டன் களத்தில் இன்றுவரை பெடரர் தான் அசைக்க முடியாத சாம்பியன்... மொத்தம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர் 8 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றவர்...

2013-ம் ஆண்டில் இருந்து பெடரரின் சரிவு ஆரம்பித்தது. 4 ஆண்டுகளில் அவருக்கு எந்த கிராண்ட்ஸ்லாம் வசமாகவில்லை... 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் பட்டங்களை வென்று கம்பேக் கொடுத்தார் பெடரர்... இருப்பினும் அந்த பார்ம் நீடிக்கவில்லை... 2018-ம் ஆண்டுக்கு பின்னர் எந்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் பெற முடியாத பெடரர் தனது 41-ம் வயதில் ஓய்வை அறிவித்திருக்கிறார். பட்டம் வென்று கெத்தாக விடை பெற வேண்டும் என்ற அவரது ஆசை நனவாகவில்லை.. என்றாலும் சாதனை நாயகனாகவே விடை பெற்றிருக்கிறார் பெடரர்...

1990-களில் பிறந்த பலர் டென்னிஸ் விளையாட்டை பார்ப்பதற்கும் அதனை கற்றுக்கொள்வதற்கும் காரணமாக இருந்தவர்... வெற்றியோ தோல்வியோ புன்னகையோடு ஏற்றுக்கொண்டவர்... அவரது எதிர்காலமும் அதே புன்னகையோடு நகரட்டும்...

சாதனைகள் என்பவை தகர்க்கப்பட வேண்டியவை... பெடரரின் சாதனைகளும் ஒருநாள் தகர்க்கப்படும்... ஆனாலும் டென்னிஸ் உலகில் அவர் தவிர்க்க முடியாத மாவீரன்.


Share :