Big Stories

ஐயா...முதலாளினு கூப்பிடனுமாம் | தரையில தான் உட்காரணுமாம்

        20

தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளம் கிராமத்தில் கடைக்கு மிட்டாய் வாங்கச் சென்ற மாணவர்களை உங்கள் ஜாதிக்காரர்களுக்கு எல்லாம் பொருட்கள் தரமாட்டோம் எனக் கூறி தின்பண்டம் கொடுக்காமல் கடைக்காரர் துரத்தியடித்த நிலையில், அந்த கிராமத்திலுள்ள பள்ளியிலும் பட்டியலின மாணவர்கள் சாதிய தீண்டாமையுடன் கீழே அமரவைக்கப்படுவது அம்பலமாகியுள்ளது. வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் முதலாளி....ஐயா.... என்று அழைக்கச் சொல்லி வற்புறுத்தும் ஜாதி வெறி பிடித்த கூட்டம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

கையில் காசுடன் ஆசையாய் மிட்டாய் வாங்கச் சென்ற சின்னஞ்சிறு பிஞ்சு மனதில், தீண்டாமை என்ற நஞ்சு நங்கூரமிட்டு விதைக்கப்பட்ட காட்சிகள்தான் இவை... காசு கொடுத்து பொருள் வாங்கினால் லாபம் கிடைக்கும் என்பதை தாண்டியும் கடைக்காரர் மனதில் ஊறிய ஜாதி வெறி, வீடியோ மூலம் பகிரங்கமாக வெளிபட்டுள்ளது. மிட்டாய் வாங்க வந்த சிறுவர்களை துரத்தி அடித்ததோடு, அவர்களை அவமானப்படுத்தியதை குரூரமாக வீடியோ வேற எடுத்து, வாட்ஸ் குரூப்பில் பதிவிட்டு, சொந்த காசில் சூனியம் வைத்திருக்கிறார் அந்த கடைக்காரர். தற்போது கடையும் சீல் வைக்கப்பட்டு ஜெயிலில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், பஞ்சாங்குளம் கிராமத்தில் காலம்காலமாக ஜாதி தீண்டாமை இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் நிலையில், அங்கு வசிக்கும் பட்டியலின சமூகத்தினர் அங்குள்ள மற்றொரு சமூகத்தினரின் தோட்டவேலை, வீட்டு வேலைக்கு கூலிக்குச் சென்று தான் பிழைப்பு நடத்தி வந்தனர். இதன் காரணமாக, பட்டியலின சமூகத்தினர் என்றால் இழிவாக பேசுவது, வீட்டு வேலைக்குச் செல்வோரை மரியாதை குறைவாக நடத்துவது என அடிக்கடி தீண்டாமை இழிசெயல்கள் அரங்கேறியிருக்கின்றன. ஆதிக்க ஜாதியினர் வயது குறைவாக இருந்தாலும் கூட அவர்களை பார்த்தால் ஜயா....முதலாளி என்று தான் அழைக்க வேண்டுமாம்...அப்படி இல்லையென்றால் சண்டைக்கு வருவார்களாம்..

பட்டியலின சமூகத்தில் யாராவது படித்து வேலைக்குச் சென்றுவிட்டால்.... ஓ படிச்சிட்டியோ என்று ஆணவமாகவும், இளக்காரமாகவும் கேட்பார்கள் என்று கண்ணீர்வடிக்காத குறையாக கூறுகிறார் இந்த அம்மா.

இது எல்லாவற்றுக்கும் மேல், அந்த கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர்கள் ஜாதி பாகுபாடுடன் நடத்தப்படுவதும் அம்பலமாகியுள்ளது. தீண்டாமை ஒரு பெருங்குற்றம்... தீண்டாமை ஒரு பாவச்செயல்.... தீண்டாமை ஒருமனிதநேயமற்ற செயல் என எத்தனை புத்தகத்தில் அச்சடித்துக் கொடுத்தாலும், சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களே மாணவர்களிடம் சாதி பாகுபாடு பார்த்து பழகுவதும்...நடத்துவதும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலத்தெரு பசங்கல்லாம் பெஞ்சுல உக்காருவாங்க....நாங்கல்லாம் கீழே தரையில் தான் அமர்ந்திருப்போம் என இந்த மாணவன் சொல்வது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

ஆசிரியர்களே சாதி பாகுபாடுடன் இழிவாக நடத்துவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாதிக்கப்பட்ட தங்களை வந்து புகைப்படம் எடுத்துச் சென்றதாக மாணவன் கூறும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடைக்காரர் சொன்ன "கட்டுப்பாடு வச்சிருக்கோம்ன்ற'' வார்த்தைக்கு இன்று வரையிலுமே அர்த்தம் விளங்கவில்லை என வெள்ளந்தியாக மாணவன் ஒருவன் கூறியது, ஜாதி பெருமை என்ற பெயரில் தீண்டாமை என்ற கொடிய விஷத்தை பிஞ்சு மனதில் கலக்க முயல்வது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது.

ஆனால், மாணவர்களின் சாதி தீண்டாமை புகார்களுக்கு எதிர்மறையாக, சம்பந்தப்பட்ட பள்ளியில் பெஞ்சு, சேர்களே இல்லை எனவும், அனைத்து மாணவர்களுமே கீழே தான் அமர வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறி வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களே தாங்கள் கீழே தான் அமரவைக்கப்படுகிறோம் என கூறும் நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் இந்த பதிலின் நோக்கம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.

இது ஒருபுறமிருந்தாலும், ஊர்க்கூட்டம் போட்டு முடிவெடுத்து ஒரு சமூகத்தினரை ஒதுக்கி வைக்கலாம் என ஒரு சட்ட திட்டத்திலும் சொல்லப்படவில்லை. சொல்லப் போனால், இப்படி ஊர்க்கூட்டம் போடுவதற்கே முதலில் சட்டத்தில் அனுமதி இல்லை. அந்த காலத்தில் இருந்த நடைமுறையை வைத்துக் கொண்டு பஞ்சாயத்து என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகத்தினரை அடக்கி ஆளுவது, ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது, தீண்டாமைக்கு ஆளாக்கும் கொடூரம் ஆங்காங்கே அரங்கேறித்தான் வருகிறது.

ஆகையால், இந்த ஊர்க்கூட்டங்களுக்கும், பஞ்சாயத்துகளுக்கும் முதலில் முடிவுகட்ட வேண்டும் என்பது இந்த சம்பவம் மூலம் அவசியமாகியுள்ளது. மேலும், ஒரு ஊரில் ஒரு சமூகத்தினருக்கு எதிராக கூட்டம் போட்டு முடிவெடுக்கும் வரையில் காவல்துறையும், உளவுத்துறையும் என்ன செய்துக் கொண்டிருந்தது எனவும் கேள்வி எழுந்துள்ளது. முன்கூட்டியே கண்காணித்து சமாதானமாக நடவடிக்கை எடுத்திருந்தாலும் இந்த பிரச்சனை எல்லாம் வந்திருக்காது என்கின்றனர்.

மாணவர்களுக்கு தின்பண்டங்கள் கொடுக்காமல் விரட்டியடிக்கும் வீடியோ வெளியானதும், இந்த காலத்திலா இப்படியெல்லாம் நடக்கிறது என பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாதியை தாண்டி மனிதம் தான் பெருசு என நினைக்காதவரையில் இவர்களை எல்லாம் சாட்டையால் அடித்தாலும், சவுக்கால் அடித்தாலும் திருத்தவே முடியாது. இதுபோன்ற சாதி திமிரில் பெருமை பேசும் போக்கத்தவர்களுக்கு நாம் கொடுக்கும் பதிலடி எல்லாம் கல்வி மூலமாகத்தான் இருக்க வேண்டும்.
 


Share :